பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மீண்ட குழந்தைகள்

2000 ஆண்டுகளுக்கு முன் கிள்ளிவளவன் என்னும் அரசன் உறையூரில் ஆண்டுகொண்டிருந்தான். திருக்கோவலூரில் மலையமான் என்னும் வீரன் ஒருவன் இருந்தான். அவன் எந்த அரசனுக்குப் போரில் துணையாகச் செல்கிறானோ அவனுக்கு நிச்சயமாக வெற்றி உண்டாகும். அதனால் அவனிடத்தில் மன்னர்களுக்கெல்லாம் அச்சம் இருந்து வந்தது.

காட்சி 1

இடம்:-கிள்ளி வளவன் அரண்மனை. அரசன் வீற்றிருக்கிறான். சூழ மந்திரிகள் வீற்றிருக்கின்றனர்.

வளவன்:-எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது. இந்த ஒரு வாரமாக நான் அடைந்துவரும் இன்பத்துக்கு எல்லையே இல்லை. நம்மோடு போர் புரிய வரும் அரசன் யாராக இருந்தாலும் நம்முடைய படைப் பலத்தால் வென்றுவிடலாம் என்ற உறுதி நமக்கு ஏற்பட்டிருக்கிறது

ஒரு மந்திரி:-அரசே, இன்னும் நாம் படைகளை மிகுதிப்படுத்த வேண்டியது அவசியம்.

வளவன்:-அது தெரியும். ஆனால் எவ்வளவு மிகுதியாக இருந்தாலும் நம்முடைய பகைவன் படையில் மலையமான் சேர்ந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தோடல்லவா இதுவரைக்கும் இருந்தோம்? வெற்றியோ தோல்வியோ போரிடும் மன்னர்களின் படைப்பலத்தைப் பொறுத்து நிற்பது தான் இயற்கை தமிழ்நாட்டில் அந்த இயற்கைக்கு மாறாக மலையமான் வந்து முளைத்தான்.