பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

கோவூர் கிழார்:-கருணையாளர் வழிப்பிறந்த தோன்றலே, இதோ அழுகிற குழந்தைகள் யாரென்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். இவர்கள் குலம் மன்னர் பிரான் குலத்துக்கு எதிர் நிற்பதா? தங்களுக்குக் கிடைத்தவற்றை நாளக்கு என்று வைக்காமல் புலவர்களுக்குக் கொடுத்துவிடும் பரம்பரையிலே பிறந்தவர்கள் இவர்கள்.

கூட்டத்தில் ஒருவர்:-(மெல்ல) அரசனுக்குச் சொல்லாமல் சொல்கிறார் ஐயா! கவனியும். நீ அவர்களைக் கொன்றால் புலவர்கள் சாபத்துக்கு ஆளாவாய் என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்; தெரிகிறதா?

கோவூர் கிழார்:-இவர்களுடைய தந்தையின் வீரமும் கொடையும் ஒரு பால் இருக்கட்டும். இந்தக் குழந்தை களைச் சற்று உற்று நோக்கும்படி அரசர் பெருமானைக் கேட்டுக் கொள்கிறேன். இவர்கள் முகத்தில் பால் வடிகிறதே பச்சைக் குழந்தைகள்! இவர்கள் தங்களுக்கு நேரப்போகும் துன்பத்தை நினைந்து அழவில்லை. எதற்காகத் தங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ளக் கூட இவர்களுக்குப் பருவம் வரவில்லை. பாவம்! கூட்டத்தைக்கண்டு, எல்லாம் புதிதாக இருக்கிறதனால் அழுகிறார்கள்.

(களிறு பிளிறுகிறது. குழந்தைகள் அழுகையை நிறுத்துகிறார்கள்.)

அதோ, மன்னர்பிரான் தம் அருள் விழிப் பார்வையைச் சற்றே இக்குழந்தைகளின்மேல் செலுத்தட்டும். யானையைக் கண்டு இவர்கள் அழுகையை மறந்துவிட்டார்கள். அழுகிற குழந்தைகள் பொம்மையைக் கண்டு சமாதானம் அடையவில்லையா?