39
தனார் வாழ்ந்த தெருவுக்கு அடுத்த தெருவில் திருத்தங்கி என்ற ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரும் மருதனாரும் உறவினர்கள். ஆனால் இயல்பில் இரண்டு பேரும் மாறுபட்டவர்கள். திருத்தங்கி என்ற பெயரே அவருக்கு ஊர்க்காரர்கள் வைத்தது. அவருடைய தாய் தகப்பனர் வைத்த பெயர் இன்னதென்பதே யாவருக்கும் மறந்து போய்விட்டது. யாருக்கும் இம்மியளவும் ஈயாத உலோபியாக அவர் இருந்தார். அதனால் அவரிடம் செல்வம் தங்கியிருந்தது. அதுபற்றியே திருத்தங்கி என்ற பெயரை மற்றவர்கள் அவருக்கு இட்டு வழங்கினார்கள். அந்தப் பெயர் குறிப்பாகத் தம் உலோபத் தன்மையைக் காட்டுகிறதென்பதை அவர் சிறிதும் எண்ணவில்லை. தம்மிடத்தில் எப்போதும் திருமகள் விலாசம் இருப்பதாக மக்கள் பாராட்டுகிறார்கள் என்றே எண்ணிக்கொண்டார். அறிவாளிகள் உலோபி, கஞ்சன், அறுத்த கைக்குச் சுண்ணாம்பு கொடுக்காதவன் என்று வைவார்கள்? நயமாகத் திருத்தங்கி என்று வையாமல் வைதார்கள். அந்த நுட்பம் திருத்தங்கியாருக்குத் தெரியவில்லை.
தம்முடைய உறவினராகிய மருத்தனாரைக் கண்டால் அவருக்குப் பிடிக்காது. "பணத்தின் அருமை தெரியாமல் ஊராருக்கெல்லாம் பொங்கிக் கொட்டுகிறான் என்று சொல்லி ஏளனம் செய்வார். ஆனால் மக்கள் மருதனாரைப் பாராட்டுவதைக் கேட்கும்போது மாத்திரம் அவருக்குப் பொறாமை உண்டாகும்.
திருத்தங்கியும் தம் வீட்டுக்குப் பின்புறத்தில் வாழைத் தோட்டம் போட்டிருந்தார். எப்படிப் பக்குவமாக அதற்கு நீர் பாய்ச்சி உரமிட்டு வளர்க்க வேண்டுமோ அப்படிச் செய்தார். அதில் ஒரு தூசியைக் கூடப் பிறருக்கு உதவுவதில்லை. மரங்கள் தளதள வென்று வளர்ந்து நீண்ட் குலைகளைத் தாங்கி நின்றன.