பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.சேதுபதியின் மோதிரம்

கையை அசைத்துத் தொட்டிலை ஆட்டிக்கொண்டே நாவையும் அசைத்துப் பாடிக்கொண்டிருந்தாள், அந்தப் பெண்மணி. முகத்திலே பொலிவின்றி, உடம்பிலே உரமின்றி, கழுத்திலே மங்கலமின்றி நின்றிருந்த அந்த மடந்தைக்கு நாவிலே மாத்திரம் இனிமையும் வன்மையும் இருந்தன. தொட்டிலிலே கிடந்த சின்னஞ் சிறு குழந்தையை ஆர்வம் பொங்கப் பார்த்தபடியே அவள் தாலாட்டிக்கொண்டிருந்தாள்.

அவள் உள்ளத்தில் என்ன என்ன நினைவுகள் ஓடினவோ, யார் கண்டார்கள்? இடையிடையே ஒரு பெருமூச்சு, சிறிது நேரம் மெளனம், சிறிது முகத்திலே புன்சிரிப்பு, பிறகு சோக ரேகை, அப்பால் இரு கண்ணீர்த் துளிகள்-இப்படியாக அவள் உள்ளக் கற்பனைக்குப் புறத்தே சின்னங்கள் தோன்றின. அவற்றைக்கொண்டு அந்தக் கற்பனையை உருவாக்கினால் கவலையும் சோகமும் இனிமையும் கலந்த கதை ஆகலாம்.

இப்போது அவள் கணவனை இழந்த மங்கை; தன் வாழ்வுக்குத் தனிப் பற்றுக்கோடாக இதோ தொட்டிலில் கிடத்தியிருக்கிறாளே, இந்தக் குழந்தையைத்தான் நம்பியிருக்கிறாள். பழங்காலக் கதையிலே உள்ளம் ஊடுருவிச் செல்லும்போது அவள் தன்னை மறக்கிறாள். இப்போது நிற்கும் நிலை நினைவுக்கு வருகையில் அவள் சோகத் தேங்கும் கண், நீர்த்துளிகளைத் துளிக்கின்றது. அந்தச் சின்னஞ் சிறு குழந்தையின் இளங் கையிலே சிக்குண்ட எதிர் காலத்தை நினைக்கையில் ஒன்றும் தெரியாமல் பெருமூச்செறிகிறாள்.இ. கதை-4