பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47

 அந்தக் கவிராயரைப் பிரிந்து அவள் வாழ்வது கிடக்கட்டும்; "பாட்டுக் கிசைந்த இரகுநாத சேதுபதி" எப்படி வாழ்கிறார்? சேது நாட்டில் கவிராயர் பலர் உண்டு; வெளியூரிலிருந்தும் வருவார்கள். ஆனால் அமிர்தகவியின் அமுத கவி இருந்தால்தான் அரசருக்கு இன்பம் நிறைவு அடையும்.

இந்தப் பழங்கதையையெல்லாம் அவள் நினைத்துப் பார்த்தாள். அந்த நினைவுலகத்திலிருந்து உண்மை உலகத்துக்கு இறங்கி வருகையில் நிலை குலைந்து பெரு மூச்சு விடுகிறாள். வேறு என்ன செய்வாள் பாவம்!

கவிராயர் மனைவியை இரகுநாத சேதுபதி அருமையாகப் பாதுகாத்து வந்தார். கவிராயர் இல்லாத குறையைத் தவிர அந்தப் பெண்மணிக்கு வேறு ஒன்றாலும் குறை வைக்கவில்லை. அந்த அம்மைக்குத் தன் குழந்தையிடம் இருந்த அன்பு பெரிதுதான்; ஆனாலும் அமிர்த கவிராயர் கான்முளை வருங்காலத்தில் அவர் பெயரைக் காப்பாற்றுவான். நாட்டுக்குப் புகழ் உண்டாக்குவான் என்ற ஆர்வத்தோடு சேதுபதி அந்தக் குழந்தையைப் பாதுகாக்க வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்தாரே; அது மாத்திரம் சாமானியமான அன்பா?

அரண்மனைக்கு அருகில் அந்த வீடு இருந்தது. கவிராயருடைய மனைவி ஒரு கிழவியோடு வாழ்ந்து வந்தாள். கூடத்திலே தொட்டிலைக் கட்டி அதிலே குழந்தையை விட்டுத் தாலாட்டிக்கொண்டிருந்தாள். கூடத்துச் சுவரின் சாளரத்து வழியே பார்த்தால் அரண்மனையின் மேற்பகுதி தெரியும்.

பழைய நினைவிலே தோய்ந்தெழுந்த உள்ளத்தில் உற்சாகம் பிறக்கும்; உடனே தன்னையும் அறியாமல் உரத்த குரலிலே அவள் தாலாட்டைப் பாடுவாள்,