பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48


ப்போது அவள் கண்ணில் திடீரென்று ஒரு மருட்சி தோன்றியது. தொட்டிலின்மேல் அவள் கண் ஓடியது; அப்பால் சுவரிலே பாய்ந்தது; சாளரத்திலே சென்றது; அதனூடே கூர்ந்து கவனித்தது. சாளரத்தின்வழியே வந்த ஓர் ஒளிதான் அவளை அப்படிப் பார்க்கச் செய்தது. ஒளிக்கதிர் தொட்டிலின் மேலே விழுந்ததை அவள் கண்டாள். சாளரத்தின் வழியே அந்தக் கதிர் வந்தது. எங்கிருந்து வந்ததென்று ஆராய்ந்தாள்.

அரண்மனையின் மேல்மாடியிலே இரகுநாத சேதுபதி கைபிடிச் சுவரின் மேலே சாய்ந்துகொண்டு தாலாட்டுப் பாட்டைக் கேட்டு இன்புற்றுக் கொண்டிருந்தார். கை பிடிச்சுவரின்மேல் வைத்த கையில் மிக உயர்ந்த 'கற்கட்டு மோதிரம் அணிந்திருந்தார். எதிரே வீசிய கதிரவனது கதிர் அதிலே பட்டுப் பளபளத்தது. அதிலிருந்து கிளம்பிய கதிர் அவர் உள்ளத்தைப் போலச் சாளரத்தின் வழியே புகுந்து தொட்டிலிலே படர்ந்தது.

கவிராயர் மனைவி உண்மையை உணர்ந்தாள். ஆனாலும் அதைத் தெரிந்துகொண்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை. பழைய நினைவுகளைச் சற்று மறந்து பாட்டிலே நிலைகொண்டாள். பழைய பாட்டோடு புதிய பாட்டையும் இணைத்துப் பாடினாள். கவிராயர் மனைவி அல்லவா?

அதுவரையில் தம்மை மறந்து கவனித்துக்கொண்டிருந்த மன்னர் திடீரென்று உடம்பு குலுங்க நிமிர்ந்து நின்றார். பாட்டின் ஒரு கண்ணி அவரை அப்படிச் செய்துவிட்டது. ஆம், அந்தப் பெண்மணி, இதோ மூன்றாம் முறையாகப் பாடுகிறாள்:

"திக்கெட்டும் போற்றிசெய்யும்
சேதிபதி ராசேந்திரன்
கற்கட்டு மோதிரத்தைக்
காண்டாசைப் பட்டாயோ"