பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49

என்ற கண்ணி இப்போது தெளிவாக அவர் காதில் விழுந்தது. ஒவ்வொரு சொல்லும் மணி மணியாக அந்தப் பெண்ணின் வாயிலிருந்து உதிர்ந்தது. அப் போது அரசருடைய கண்ணிலிருந்து இரண்டு துளி நீர் உதிர்ந்தது.

"கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்" என்ற பழமொழி அவர் நினைவுக்கு வந்திருக்கவேண்டும். விறுவிறுவென்று இறங்கினார். கீழே போய் ஓர் அழகிய தட்டில் பணமும் ஆடையும் வைத்தார்; தம் கையிலே இருந்த மோதிரத்தைக் கழற்றி அவற்றின் நடுவிலே வைத்தார். தக்க மனிதர் ஒருவரை அழைத்து, "இதோ பாரும்; கவிராயர் மனைவியாரிடம் கொண்டு போய்க் கொடும். கற்கட்டு மோதிரத்தைக்கண்டு ஆசைப்பட்ட குழந்தைக்கு மன்னர் சம்மானம் செய்திருக்கிறார் என்று சொல்லும்” என்று தழுதழுத்த குரலிலே கூறி அனுப்பினார்.

"மன்னர்பிரான் உங்கள் குழந்தைக்குச் சம்மானம் இது என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்" என்ற வார்த்தைகளோடு அந்த முதியவர் கவிராயர் மனைவியின் முன்னே நின்றார். அவள் இதை எதிர்பார்த்தவள் அல்லவே! மன்னர் இருப்பதைத் தெரிந்துகொண்ட குறிப்பையல்லவா அவள் வெளியிட்டாள்? ஆனால், மன்னர், தமிழருமை தெரிந்த சேதுபதி, இப்படி யல்லவா செய்துவிட்டார்!"

அவளுக்கு நன்றியுரை கூற வாய் எழும்பவில்லை. தட்டோடு வாங்கிக் கண்ணில் ஒற்றிக்கொண்டாள். அந்தக் கற்கட்டு மோதிரத்தைத் தனியே எடுத்து ஒற்றிக் கொண்டாள். அது அவள் கண்ணீரினால் நனைந்து போயிற்று.