பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

51

காரணம் என்று அறிந்த சோழன் அவனை மிகப் பாராட்டிப் பரிசு வழங்கினான்; தொண்டைமான் என்னும் சிறப்புப் பெயரும் அளித்தான். அதுமுதல் அந்த வீரனை யாவரும் தொண்டைமான் என்றே வழங்கி வரலாயினர்.

அந்த வீரனுக்குப் பின் அவன் வழி வந்தவர்களையும் தொண்டைமான் என்றே மக்கள் அழைத்து வந்தனர். மூலனூர் என்ற ஊரில் தொண்டைமான் என்ற பெயரோடு ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனும் பெருவீரன். அக்காலத்தில் ஆர்க்காட்டில் நவாபு அரசாண்டு கொண்டிருந்தார். கொங்கு நாட்டில் சங்ககிரி என்னும் இடத்தில் உள்ள மலையின்மேல் ஒரு கோட்டை உண்டு. அதைச் சங்ககிரி துர்க்கம் என்பார்கள். அங்கே அரசர்கள் தம் பகைவர்களைச் சிறை வைக்கும் வழக்கம் இருந்தது.

நவாபு சில காலம் சங்ககிரிக்கு வந்து தங்குவது உண்டு. கொங்கு நாட்டிலும் பிற இடங்களிலும் உள்ள பாளையக்காரர்கள் அங்கே வந்து அவரைக் கண்டு செல்வார்கள்.

மூலனூரில் வாழ்ந்திருந்த தொண்டைமானுக்கு அந்த நவாபைக் காணவேண்டும் என்ற ஆசை எழுந்தது. நவாபினிடம் சிறப்பாகச் சொல்லிக்கொள்ள அவ்வீரனுக்கு ஒரு குறையும் இல்லை. தன்னுடைய உடல் வலிமையைக் காட்டவேண்டும் என்ற விருப்பம் மாத்திரம் இருந்தது. பழைய காலம்போல் ஏதேனும் போர் நேருமானால் படையில் தனக்கும் ஒரு பதவி கொடுத்தால் தன் தோள் தினவு தீரும் என்று சொல்லிக் கொள்ளும் எண்ணமும் இருந்திருக்கலாம்.

நவாபு சங்ககிரிக்கு வந்து தங்கியிருக்கிறார் என்ற செய்தி மூலனூர் வீரனுக்குத் தெரிந்தது. அவரைக் காணவேண்டும் என்று புறப்பட்டான். சங்ககிரிக்கு