55
கடாவின் காதை அறுத்த இந்தச் செய்தி ஊர் முழுவதும் பரவியது. "ஐயோ, பாவம்! இவனுக்கு என்ன போதாத காலமோ, இந்தக் காரியத்தைச் செய்து விட்டான்!” என்றே யாவரும் இரங்கினார்கள். நிச்சயம் தொண்டைமானுக்குத் தக்க தண்டனை கிடைக்கும் என்றே அஞ்சனார்கள். ஆனால் அதே சமயத்தில், "இப்படி ஒரு வல்லாள கண்டன் வந்தால்தாள் அந்த முரட்டு ஆடு அடங்கும்” என்றும் பேசிக்கொண்டார்கள்.
காதறுந்த ஆடு நவாபின் மகன்முன் போய் நின்றது. அவன் மூக்கறுந்தவன் போல ஆனான். "எந்தப் பயல் இந்தக் காரியத்தைச் செய்தான்?" என்று குதித்தான். நவாபுக்குச் செய்தி போயிற்று. -
"இந்தக் காரியத்தைத் துணிந்து செய்தவனை உடனே என்முன் கொண்டுவந்து நிறுத்துங்கள்" என்று நவாபின் உத்தரவு பிறந்தது.
மூலனூர்த் தொண்டைமான் தான் செய்த காரியத்திற்காக இரங்கவில்லை. தண்டனை கிடைக்குமே என்று அஞ்சவும் இல்லை. தலை மறைவாக இருக்கவும் அவனுக்கு விருப்பம் இல்லை. அவன் அதை வேண்டுமென்றே செய்திருக்கிறான். ஆதலால் மேல் விளைவுக்கும் அவன் ஆயத்தமாக இருந்தான்.
நவாபின் ஏவலர்கள் தொண்டைமானை அழைத்துக் கொண்டு நவாபின்முன் நிறுத்தினார்கள். வீரன் நவாபுக்குப் பணிவுடன் ஒரு சலாம் போட்டு நின்றான். நவாபு அவனை ஏற இறங்கப் பார்த்தார். ஆள் வாட்ட சாட்டமாக இருந்தான். அவன் திண்ணிய தோள்களும் பரந்த மார்பும் அவருக்கு வியப்பை உண்டாக்கின.
"நீ தானே கடாவின் காதை அறுத்தவன்?" என்று கேட்டார்.
"ஆம்" என்றான் தொண்டைமான்.