"அரசன் மிகவும் நல்லவன். ஆனால் அமைச்சர்கள் நாட்டு நலனைக் கருதுபவர்களாக இல்லை. அவனுடைய அருள் உள்ளத்தை நாமெல்லாம் நன்கு அறிந்திருக்கிறோம். பஞ்சம் வந்த காலத்தில் அரச பண்டாரத்தில் பொன் கடன் பெற்றோம். நம்முடைய நிலங்களே வளப்படுத்தும்பொருட்டே அப்படிப் பெற்றோம், அந்தப் பஞ்சத்தின் விளைவு இன்னும் முற்றும் நீங்கினபாடில்லை. கடனைக் கொடுப்பதென்றால் நிலத்தையே கொடுத்துவிட வேண்டியதுதான்" என்று குடிகள் தம்முள் பேசிக்கொண்டார்கள்.
"அரசன் நேரிலே இவற்றைக் கவனித்தால் நலமாக இருக்கும். அமைச்சர்கள், 'இப்போது நிலம் விளைகிறது; கடனைத் தண்டலாம்' என்று சொல்லியிருக்கிறார்கள். அதனை உண்மையென்று கருதிய அரசன் கடனைத் தண்ட முயற்சி செய்கிறதாகத் தெரிகிறது" என்றும் பேசிக்கொண்டார்கள்.
கிள்ளிவளவன் என்ற சோழன் ஆட்சியிலே குடிமக்கள் நன்றாக வாழ்ந்து வந்தனர். இடையிலே மாரி பொய்த்துப்போய்ப் பஞ்சம் வரவே, நிலம் விளைவு ஒழிந்தது. குடிமக்கள் துன்பத்துக்கு ஆளாயினர். அப்போது அரசன் வேளாளர்களுக்குப் பொன் கடன் கொடுத்து வேளாண்மை செய்யச் செய்தான்.
அக்காலத்தில் உணவுப் பண்டங்களை விற்றுப் பணமாக மாற்றி வைத்துக்கொள்ளும் வழக்கம் இல்லை. நாணயத்திற்கு அதிகச் செலாவணி இராது. விளைந்த