பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

73

 தாம் திருடிய பொன்னையும் பொருளையும் பகுத்துக் கொண்டபோது, எதிர்பாராமல் அவன் வந்ததால் அஞ்சி ஓடிவிட்டார்கள். எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு ஓட முடியவில்லை; பெரும் பகுதியை விட்டு விட்டுப் போனர்கள். அவை அங்கேயே கிடந்தன.

செட்டி பிள்ளையப்பன் அவற்றின்மேல் கண்ணை ஒட்டினான். உயிரை விட்டுவிட வந்த இடத்தில் பொன்னும் பொருளும் கிடைப்பதென்றால், இறைவன் திருவருள் என்பதையன்றி வேறு என்ன சொல்வது? அவன், 'புலவருக்கு ஒன்றும் கொடுக்க இயலவில்லையே!' என்று துயருற்றே உயிரை நீக்க வந்தான். எது அவனிடம் இல்லையோ அது இப்போது கிடைத்து விட்டது. இனிமேல் உயிரை விடவேண்டிய அவசியம் இல்லையே!

அவன் தான் வழிபடும் கடவுளை மனமார இறைஞ்சினான். அவன் கண்களில் நீர் துளித்தது. நாம் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைத்தது என்பது அவன் திறத்தில் நல்ல முறையில் பலித்தது. அந்தப் பொருள்களை யெல்லாம் சேர்த்து எடுத்துக்கொண்டான்; நேரே தன் இல்லம் வந்து சேர்ந்தான்.

ஊர்க்காரர்கள் அவன் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம், "புலியைக் காண வில்லை” என்று சொன்னான். புலவன் மறுநாள் வருவான் என்று எதிர்பார்த்து ஆவலோடு காத்துக் கொண்டிருந்தான். அவன் முன்பு செய்த கற்பனை வேறு; 'அவன் வருவான்; தன் மறைவைக் கேட்டுத் துயருற்றுப் போவான்’ என்று நினைத்திருந்தான். இப்போது அந்தக் கற்பனை மாறியது.

புலவன் வந்தான். முக மலர்ச்சியுடன் அவனை வரவேற்று உபசரித்தான் செட்டி பிள்ளையப்பன். அவனுக்குப் பொன்னும் பொருளும் வழங்கினன். அப்படி