பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

நெல்லைத் தமக்கும் அறத்துக்கும் பயன்படுத்திக்கொண்டனர் மக்கள். எஞ்சியதைக் கடனுக்காகக் கொடுக்கச் சோழ நாட்டுக் குடிமக்கள் எண்ணியிருந்தார்கள்.

சில அமைச்சர்களுடைய சொற்களைக் கேட்டுக்கொண்டு அந்தப் பழைய கடனை எப்படியாவது தண்டி விட வேண்டுமென்று மன்னன் நிச்சயித்தான். அப்படிச் செய்வதாக இருந்தால் மக்கள் பட்டினி கிடக்க நேரும். இயற்கையாகப் பஞ்சம் இல்லாவிட்டாலும் செயற்கைப் பஞ்சம் வந்துவிடும. அதனால் குடிமக்கள் அஞ்சினர். அரசனை அணுகித் தங்கள் நிலையை எடுத்து முறையிடலாம் என்றாலோ, அமைச்சரைக் கடந்து அவனைச் சேர்வது எளிதன்று.

இத்தகைய நிலையில் குடிமக்களுக்குச் சமய சஞ்சீவி போல நேர்பட்டார், ஒரு தமிழ்ப் புலவர். வெள்ளைக் குடி என்ற ஊரிலிருந்து அரசனைப் பார்த்துவிட்டுப் போகலாமென்று வந்தார் அவர். அவருக்கு நாகனார் என்று பெயர். அவரிடம் குடிமக்கள் தங்கள் நிலையை எடுத்துச் சொன்னார்கள். "எப்படியாவது இதை அரசர் செவியில் ஏறச் செய்ய வேண்டும். அமைச்சர் சுவரைப் போலச் சூழ உள்ளனர். அவர்களை ஊடுருவிக்கொண்டு செல்வது எங்களால் இயலாத காரியம். எங்கள் வாழ்வு உங்கள் வாக்கில் இருக்கிறது” என்று சொல்லி இரந்தனர்.

நல்ல செயல்களைச் செய்வதில் முன் நிற்பவர் புலவர். நாடு வளம்பெற வேண்டுமானால் உழவர் சிறக்க வேண்டும். ஆகவே அவர்கள் குறையை அரசனுக்குத் தெரிவிப்பது தம்முடைய இன்றியமையாத கடமையென்று உணர்ந்து, எப்படியாவது அவர்கள் காரியத்தை நிறைவேற்றிவிட உறுதி பூண்டார்.