89
"பேசாமல் இரு; திரிகூடாசலபதியின் திருக்கோயிற் பிராகாரம் முழுவதும் கல்லால் தள வரிசை போட வேண்டும். இந்த யோசனையை அந்தப் பெருமான் உன் வாயிலாக அறிவுறுத்தினன்.”
இப்படிச் சொல்லிக்கொண்டு அந்தப் பெண்மணி மூக்குத்தியைக் கழற்றினாள். காதணியை எடுத்து வைத்தாள். திருமங்கலியத்தைத் தவிர மற்ற அணிகலன்கள் அனைத்தையும் கழற்றி வைத்துவிட்டு, கோயிலில் இருந்த தருமகர்த்தரை அழைத்து வரச் சொன்னாள்.
"இதோ பாருங்கள்; இந்த அணிகலன்கள் யாவும் கோயிலுக்கு நான் வழங்கிவிட்டேன்" என்று அவரிடம் சொன்னாள்.
"என்ன இப்படித் திடீரென்று யோசனை வந்தது?" என்று கேட்டார் தருமகர்த்தர்.
"இவ்வளவையும் விற்றுப்பணமாக்குங்கள். இந்தத் திருக்கோயிலின் வெளிப்பிராகாரம் முழுவதும் கல் பாவி விடுங்கள். இந்த அணிகலன்கள் போதவில்லையானால் மேற்கொண்டு பொன்னும் பொருளும் அனுப்புகிறேன்" என்றாள் சமீன்தாரிணி.
"என்ன அண்ணி இது? அண்ணனுக்குத் தெரியாமல் இப்படிச் செய்யலாமா?" என்று நாத்தி கேட்டாள்.
"என் நகைகள் இவை; என் பிறந்தகத்திலிருந்து கிடைத்தவை; ஆதலால் இவற்றைக் கொடுக்க முன் வந்தேன். அன்றியும் உன் தமையனார் இதைக் கேட்டால் மகிழ்வாரேயன்றி வருத்தப்படமாட்டார்".
"இப்போதே இப்படிச் செய்யாமல் ஊருக்குப்போய் அவருடன் கலந்துகொண்டு வேறுவகையில் நீ நினைத்த காரியத்தைச் செய்திருக்கலாமே; இவ்வளவு அவசரம் எதற்கு?”