பக்கம்:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

13

ஆண்டிற்கோர் முறையே காண முடியும்; அப்போதும் அளவளாவ அல்ல, அடி தொழவே என்றிருந்த அரசாளும் முறையில் புரட்சி ஏற்பட்டு இன்று ஆலைத் தொழிலாளியும், உலைக்கூடத்துத் தோழனும், ஊராளும் உரிமை பெற்றுவிடவில்லையா?

வானுலக வீதியிலே சுற்றி, தேவர்தம் வடிவழகைக் கண்டு கூறி வருபவரே கவிஞர். அஃதே கலை என்றிருந்த நிலைமாறி, கவி நம்முடனேயே இருப்பார், நமது உலகில் தான் உலவுவார், தாம் காண்பனவற்றையே காண்பார், ஆனால் அவைகளைப்பற்றி நாம் கூறத் தயங்குவோம் இயலாததால், அவர் கூறுவார், அறிவுத் தெளிவால், கலைத்திறனால்; இந்தப்புரட்சியை செய்தார் பாரதிதாசன்.

புரட்சித் துறையில் ஈடுபட்டவர்கள் பெரிதும், துவக்கத்தில் பூவால் அர்ச்சிக்கப்படுவதில்லை. புன்மொழிகளையே வீசப்பெறுவர், அதிலும் மொழி வீசும் துறையிலே ஈடுபட்ட புலவர்கள் உலகிலே புத்தம் புதிய புரட்சியை ஒருவர் வெற்றிகரமாகச் செய்து வருவது கண்டால், பொச்சரிப்பின் விளைவாகப் புன் மொழி, மாரிபோல் பொழியத்தானே செய்யும்.

பாரதிதாசன், இந்த மாரியைச் சட்டை செய்யவில்லை. புரட்சியில் ஈடுபட்டுள்ளவருக்கு இதற்கு நேரம் ஏது? போரிட்டார். போரிட்டார், போரிட்டுக் கொண்டே இருக்கிறார்! வென்றார், வெல்கிறார், வெற்றி பெற்றபடியே இருப்பார்!

அவர் பெற்ற வெற்றிகளிலே ஒன்று அவருடைய கவிதைகளை இன்று மக்கள் அறிந்து கொண்டார்கள், புரிந்து கொண்டார்கள், ரசிக்கிறார்கள். பயன் பெறுகி