பக்கம்:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19


தென்னாட்டன்னம் என்ற இடத்திலே மிக எளிதாகக் கதையை முடித்துவிட்டார். பாட்டுடைத் தலைவன் இறந்ததற்குப் பிறகு பாட்டுடைத்தலைவியை இறக்கச் செய்வதற்கு பல கவிதைகளும், பல பக்கங்களும், தாண்டிச் சென்று இடர்ப்பட்டு அவளும் இறந்தாள் என்று பலரும் முடிக்கக் காண்கிறோம். ஆனால் நமது கவிஞரோ "செத்தான் செத்தாள்" என்று மிக மிக எளிதாக எழில் துலங்கக் காட்சியைப் புலப்படுத்தியுள்ளார். கருத்துப் பொலிவோடு கூடிய புத்தம் புதிய உவமைகளை மக்கள் மனதிலே சென்று பதியும் படியாக ஆங்காங்கு மிளிரச் செய்யும் பாங்கு கவிஞரிடத்தே தனித்தமைந்துள்ளது. எல்லாவற்றையும் விட நம்மையெல்லாம் மகிழச் செய்வது பகுத்தறிவுக் கருத்துக்களை எல்லாக் கவிதைகளிலும் அள்ளி வீசியிருப்பது தான். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் களங்கமற்ற குழந்தையுள்ளங்கொண்டு கருத்துப் பொதிந்த உரையாடல்களால் நம்மோடு மகிழும் பண்பினராவார். புலவர்கள் இயல்பாகவே வரவழைத்துக் கொள்ளும் வளைந்து வணங்கித் தன்னிலையில் தாழ்ந்து நடக்கும் பண்பினை நமது கவிஞரின் சொல்லிலோ, செயலிலோ, தோற்றத்திலோ காண முடியாது. தன் உள்ளக் கிடக்கையை எவ்விடத்தும் எடுத்துக்கூற எப்பொழுதும் தயங்கியதில்லை. அத்துணை அளவு திண்ணிய உரம் படைத்தவர். அதற்கு மட்டும் ஒரு எடுத்துக்காட்டு. பிரான்சிலே மூயில்பெரி என்பார் குடியரசுத் தலைவராக வந்தார். அவர் ஆட்சிபீடம் ஏறிய காலத்தில் கல்வியானது குருமார்கள் கையில் இருந்தது. அந்த நாடு மட்டுமின்றி உலகில் எங்கணும் பாதிரிகள்,