பக்கம்:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

குழுமியிருக்கின்றார்கள். நிகழ்ச்சிநிரலின்படி தமிழில்வாழ்த்துப்பா இசைக்கப் புரட்சிக் கவிஞர் அழைக்கப்பட்டார். கவிஞரின் பாட்டை பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்த்துக் கூறச் சில நரியுள்ளம் படைத்தோரும் அங்கிருந்தனர். காரணம் கவிஞரின் கவிதையில்வரும் சுயமரியாதைக் கருத்துக்களை எடுத்துக் காட்டி கவிஞரின் மீது பிரெஞ்சுத் தலைவர்களுக்கு ஆத்திரம் ஏற்படவும், அப்படி எடுத்துக்கூறிய தம்மீது அன்பு பிறக்கவுமாகும். புரட்சிக்கவிஞர் பாடத்தொடங்கி “வறியோர்க்கெல்லாம் கல்வியின் வாட”ை என்ற முதலடியை இசைத்தார், அது மொழிபெயர்க்கப்பட்டது. பின் “வறியோர்க்கெல்லாம் கல்வியின் வாடை, வரவிடவில்லை மதக்குருக்களின் மேடை” என்று இரண்டாவது அடியையும் சேர்த்து இசைத்தார். கவிஞரைக் காட்டிக் கொடுத்துத் தடை செய்யக்காத்திருந்த கல்நெஞ்சம் படைத்த காக்கையினத்தோன் உளங்களித்து மொழி பெயர்த்தான். உடனே பாதிரிமாரின் மலர்ந்த முக மெல்லாம் குவிந்தன. சாந்தம் குடியிருந்த உள்ளத்தில் சினம் குடியேறிற்று, கண்கள் வெண்மை சிவப்பாயிற்று. சாய்ந்திருந்தோர் நிமிர்ந்தார். கேளாச்செவிகள் கேட்கத் தலைப்பட்டன. விழாத் தலைவர் சோர்ந்தாரேனும் அறிவும் அவா மேலீட்டால் மற்றப் பகுதியையும் கேட்கவேண்டி ‘கோந்தினியே’ ‘கோந்தினியே’ (மேலே தொடங்கு மேலே தொடங்கு) என்றார். “வறியோர்க்கெல்லாம் கல்வியின் வாடை, வரவிடவில்லை மதக்குருக்களின் மேடை, நறுக்கத் தொலைந்தது அந்தப் பீடை!” என்று மூன்றாவது அடியையும் சேர்த்து கவிஞர் இசைத்தார். மொழி பெயர்க்கப்பட்டவுடன் கோணியிருந்த முகமெல்லாம் முற்றுங் கோணலாயின.