பக்கம்:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27



வந்த நாட்டிலே கவிஞர்கள் கயமை நிறைந்த கடவுட் புராணங்களைப் பாடி மக்களை மடமைச் சேற்றில் அழுந்தச் செய்த தன்மையைக் கண்டார், கண்டு வெகுண்ட புரட்சிக்கவிஞர், “மாடுகளும் வழக்கத்தால் செக்கைச் சுற்றும், மடையர்களும் இயற்றிடுவார் கடவுட் பாடல்” என்று முழங்கினார். கடவுள், மதம், மூடப் பழக்க வழக்கம், குருட்டு நம்பிக்கை , அரசியல், வாழ்க்கை இயல் ஆகியவற்றின் பேரால் பெருங்குடி மக்கள் தனிப்பட்ட ஒரு சிலரால் ஏமாற்றப்படுவதைக் கண்டு மனம் புழுங்கினார். புழுங்கிய அவர் உள்ளத்தினின்றும் எழும்பிய தீப்பொறி கொடுமைக் குட்படுத்தப்பட்டோரின் உள்ளங்களில் கொழுந்துவிட்டெரிகிறது. புது உலகைப் புரட்சிக் கருத்துக்களிலே பூக்கச் செய்து புது உலகை அமைக்கப்போகும் புரட்சிக்கவிஞர், பழைய உலகைப் பார்த்துக் கேட்கிறார்:

“மண்மீதில் உழைப்பாரெல்லாம்
வறியராம்! உரிமை கேட்டால்
புண் மீதில் அம்பு பாய்ச்சும்
புலையர் செல்வராம்”


இது நீதியா என்று கேட்கிறார்.

“முழங்காற் சேற்றினில் முக்கி விளைத்தவன்
முடச் சகோதரன் பள்ளப் பயல்- அதை
மூக்குக்கும் நாக்குக்கும் தண்ணீர்க்காட்டித் தின்னும்
மோசக் காரன் மேலாம்"


இது நேர்மையா என்று கேட்கிறார்.

கூழுக்குப் பற்பலர் வாடவும் சிற்சிலர்
கொள்ளை யடிப்பதும் நீதியோ?

என்று கேட்கிறார்.