பக்கம்:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28



இத்தகைய புரட்சிக் கேள்விகளை இந்த நாட்டில் வேறு எந்தக் கவிஞனும் கேட்டதில்லை; கேட்கத் துணிவு கொண்டதில்லை. நம் புரட்சிக் கவிஞர் மக்களைப்பார்த்து மூடப் பழக்கவழக்கங்களென்னும் பழமைச்சேற்றில் புரளாமல் புரட்சி மனங்கமழும் பூங்காவில் உலவச் சாெல்லுகிறார். இளமையுள்ளங்களைப் பார்த்து, கன்னங்கருத்த இருட்டின் கறையாக, தொங்கும் நரம்பின் தூளாக வாழாமல் மக்களாக வாழச் சொல்லுகிறார். புரட்சி மணங்கமழும் பூஞ்சோலை நிறைந்த புது உலகிற்கு மக்களை அழைக்கிறார் பேதமிலா அறிவுடைய அவ்வுலகத்திற்குப் பேசு சுயமரியாதை உலகு எனப்பேர் வைப்போம் என அறைகூவி அழைக்கிறார்! புரட்சியில் மலரும் புது உலகத்திற்கு நம்மை அழைக்கிறார்! நாமும் புன்முறுவலோடு போவோம்! புரட்சிக் கவிஞனால் தான் புரட்சியில் பூக்கும் புது உலகிற்கு நம்மை அழைத்துச் செல்ல முடியும்! - இரா. நெடுஞ்செழியன் எம். ஏ.