பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

நூல்களைத் திரட்டி வைத்துகொண்டு, ஒரு குறிப்பிட்ட தொகையினைச் சந்தாவாக மக்களிடமிருந்து பெற்றுக் கொண்டு, நூல்களைப் படிக்கக் கொடுத்துதவினர். இதுபோன்ற சந்தாநூலகங்களில்(Subscription Libraries) 18-வது நூற்றாண்டின் மத்தியில், பிலடெல்பியாவில் (Philadelphia) பென்சமின் பிரான்க்லின் என்ற அச்சகத் தொழிலாளியால் நடத்தப்பட்ட நூலகம் குறிப்பிடத் தக்கதாகும். இந்நூலகத்தின் உறுப்பினர்கள் ஆண்டிற்கு நாற்பது சில்லிங்குகளைச் செலுத்தி, இந்நூலகத்திலிருந்து நூல்களைப் பெற்றுப் பயன்படுத்தி வந்தனர். ஐம்பதிற்கு மேற்பட்ட வணிகர்கள் இந்நூலக உறுப்பினர்களாய் இருந்து வந்தனர். இங்கிலாந்திலிருந்து பல நூல்கள் வரவழைக்கப்பட்டன. வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் நூல்கள் கொடுக்கப்பட்டன. நூல்களை ஒழுங்காகத் திருப்பித் தர வேண்டும் என்பதற்காக நூல்களை எடுத்துச் செல்வோரிடம், அவர்கள் எடுத்துச் செல்லும் நூல்களின் விலையின் இரண்டு மடங்கிற்கு உறுதிமொழிச் சீட்டு (Promissary Note) எழுதி வாங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நியூ போர்டில் ரெட் வுட் நூலகமும், சார்ல்சு டவுனில் நூலகக் கூட்டுறவுச் சங்க நூலகமும், நியூயார்க்கில் ஒரு நூலகமும் திறக்கப்பட்டன. கி.பி. 1770-இல் நியூ ஆம்ப்சயரிலும், கி.பி. 1796-இல் நியூ செர்சியிலும் நூலகங்கள் தொடங்கப்பட்டன. நியூ ஆம்ப்சயர் நூலகம் அமெரிக்கப் புரட்சிக்குப் பின்னர் அரசாங்க நூலகமாக மாறியது.

19-வது நூற்றாண்டில்

பத்தொன்பதாவது நூற்றண்டின் தொடக்கத்தில் பல நூலகங்கள் திறக்கப்பட்டன. ஏறத்தாழ ஐம்பதாயிரம் நூல்கள் மக்களுக்காகச் சேகரித்து வைக்கப்பட்டன. கி.பி. 1800-இல் வாசிங்டன் நகரில் தேசிய