பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

பகுதியில் இலட்சக்கணக்கான மக்கள் நூலக வசதிபெற வாய்ப்பில்லாமலிருந்தனர். மின்னி சோடா பகுதி நூலகக் குழுவினரின் பெருமுயற்சியால், ஆறுபகுதிகளில் கிராமிய நூலகங்கள் திறக்கத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டது. இத்திட்டத்திற்காக உழைத்த மக்கள், நூலகக் கட்டடங்களில்லாத கிராமங்களில், கடைகளிலும், முடிவெட்டும் இல்லங்களிலும் சிறு நூலகங்களைத் தோற்றுவித்ததோடமையாது, பொன்னும் பொருளும், நூற்களும் நன்கொடையாகக் கொடுத்துதவினர். நூலக ஊர்திகள் (Book-Mobile) சில வாங்கப்பட்டன. இவ்வூர்திகளில் நூற்களைப் பல இடங்களுக்கும் எடுத்துச் சென்று மக்களைப் பயன்பெறச் செய்தனர்.

நாட்டின் நலனே தங்கள் நலன் எனக் கொண்டிருந்த இராணுவத்தினருக்காகத் தொடங்கப்பட்ட நூலகங்களுக்கு நாட்டு மக்கள் பெரிதும் உதவினர். போர்ட்டிக்சு (Fort Dix) என்னும் இடத்தில் தொடங்கப்பட்ட இத்தகைய நூலகத்திற்கு 20,000 புத்தகங்களை மக்கள் நன்கொடையாகவே கொடுத்துதவினர். சமுதாய நூலகத்திட்டத்தின் கீழ் பணியாற்றிய மக்கள் இந்நூலகங்களுக்கும் சென்று உதவி புரிந்தனர். இராணுவ மருத்துவக் கூடங்களுக்கும், விமானப்படையினர் இருந்த பகுதிக்கும், ஊர்திகளில் புத்தகங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.

அமெரிக்க நூலகச் சங்கம்

(American Library Association)

அமெரிக்க நாடு நூலகத் துறையில் சிறந்ததொரு வளர்ச்சி பெறுதற்கு அமெரிக்க நூலகச் சங்கமானது அரும்பாடுபட்டது. கி.பி. 1941-இல் இச்சங்கத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 16,000 ஆகும். வெளிநாடுகளிலிருந்து பலர் இச்சங்க உறுப்பினர்களாயினர். நகரங்கள் தோறும் நூலகக் குழுவினர்களை ஏற்-