பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

மன்றத்திற் புகுந்தவுடனே தைலங்களில் போடப்படும். அதனோடே வெற்றுப் பெட்டிகளில் வைக்கப்படும். பிறகு பெட்டிகளிலுள்ள காற்று நீக்கப்பட்டு ஒருவித கரிவளி கலந்த ஆவி பாய்ச்சப்படும். மூன்று மணி நேரம் சென்றபின்னர் அந்த ஆவி நீக்கப்பட்டுக் காற்று உட்புக விடப்படும். பிறகு அறிக்கைகள் வெளியில் எடுக்கப்படும். சில அறிக்கைகள் அழுக்கடைந்திருக்கலாம். அழுக்குப்போக்கி என்ற ஒரு கருவியுண்டு. அதன் மூலம் அறிக்கைகள் தூய்மையாக்கப்படும். அக்காலை அறிக்கைகள் சிறிதுகூடக் கிழியாது.

மன்றத்தின் அதிகாரிகள் அறிக்கைகளைத் தூய்மை செய்யுமுன் அறிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட தாள், மை ஆகியவற்றின் கலவைகளைப் பற்றி ஆராய்ந்து அதற்கேற்றவாறே தூய்மை செய்ய முற்படுவர். பழைய அறிக்கைகள், நூல்கள் ஆகியவற்றிலே மடிப்புக்கள் இருப்பது உண்டு. அதனைப் போக்குவதும் இந்த மன்றத்தின் பணியாகும். இன்னும் சில வேளைகளில் அறிக்கைகளைப் படமெடுத்துச் சேர்ப்பதும் உண்டு. இந்த மன்றத்தில் பொருட்காட்சி ஒன்றுண்டு. அதிலே உலகப் போரின்போது வெளியான முக்கியமான அறிக்கைகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்படும். இந்த மன்றத்தின் பொறுப்பிலேயே அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக இருந்த ரூசுவெல்ட் என்பவர் சேர்த்துவைத்த நூல்கள் இருக்கின்றன. அவையெலாம் ரூசுவெல்ட் குடும்பத்தார் தந்தவை யாகும்.