உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. அமெரிக்க நூலகங்களில் இந்திய நூல்கள்

அண்மையிலே இரண்டு தென்னிந்திய பதிப்பாசிரியர்கள் தமது அமெரிக்கச் சுற்றுப் பயணத்தின்போது வாசிங்க்டனிலுள்ள காங்கிரசு நூலகத்துக்கு வந்தனர்; காங்கிரசு நூலகத்தின் பெருமை கண்டு வியந்தனர். நூலகத்தைப் பார்த்து வருகையில் ஒருவர் இந்திய நூல்கள் உள்ள பக்கம் திரும்பி ஒரு நூலின் பெயரைச் சொல்லிக் கேட்டார். அவ்வளவுதான்; கேட்ட வாய் மூடுமுன் கேட்ட நூல் அவர் கைக்கு வந்ததும் வியப்பால் மயங்கி நின்றார்.

இந்த நூலகம் 150 ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்படுத்தப்பட்டது. இந்த நூலகத்திலே பத்து மில்லியனுக்கு மேற்பட்ட நூல்கள் உள்ளன. நூல் அலமாரிகளின் நீளம் 250 மைல்களாகும். உலகத்திலே உள்ள அத்தனை மொழிகளிலும் வெளியிடப்படும் நூல்களையும் பருவ மலர்களையும் உடனுக்குடன் வாங்குவதற்குரிய ஏற்பாடுகள் இந்த நூலகத்திலே செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு பிறநாட்டு நூல்களையும் மலர்களையும் வாங்குவதற்காக ஏறத்தாழ 500,000 டாலர்கள் ஆண்டுதோறும் செலவழிக்கப்படுகின்றன.

ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கு முன்பே இங்குள்ள கிறித்தவப் பாதிரிகள் இந்திய ஏடுகளை அமெரிக்கக் காங்கிரசு நூலகத்திற்கு வாங்கி அனுப்பத் தொடங்கி விட்டனர். என்றாலும் அடிக்கடி அயல்நாட்டு நூல்களை அமெரிக்க நூலகம் வாங்கத் தொடங்கியது இரண்டாவது உலகப் போரின்போதுதான். அப்போது இந்தியாவி-