பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57

அச்சடித்துக் கொண்டிருக்கும் கிழவர் அருகிலும் அவன் அமர்ந்திருக்கிறான். மேலும் அவன் பலவித உடையணிந்த ஆடவர், பெண்டிர், இந்த உலகையே மறந்து ஆழ்ந்து படித்துக் கொண்டிருப்பவர்கள், அவர்களைப் போலவே சுற்றுப் புறத்தை மறந்து, ஆனால் உறக்கத்தில் ஆழ்ந்திருப்போர் ஆகியோரை அடுத்தும் அவன் அங்கு அமர்ந்திருக்கலாம். ஒரு தடவை அங்கு படித்துக் கொண்டிருந்த வாலிபன் தோளின் மீது ஓர் பறவை அமர்ந்திருந்ததாக ஒரு பெரியார் தமது கட்டுரை யொன்றில் கூறியுள்ளார். இதிலிருந்து பறவை யும் அங்கு விரும்பத் தகுந்ததாகும் என்பது போதரும்.

தடையில்லாத வரவேற்புடன் அறிவின் சிறப்பும் இணைந்து, நியூயார்க் பொது நூலகத்தை நிகரற்றதாகச் செய்கிறது. உலகிலேயே மிகப் பெரியதும், சிறப்பு மிகுந்ததும், பல மக்களின் பலவிதப் பழக்க வழக்கங்களைக் கொண்டிலங்குவதுமாகிய நியூயார்க் நகரின் கண்ணாடியென இந் நூலகத்தைக் கூறலாம். ஏனெனில் நியூயார்க் நகரின் கட்டுப்பாடற்ற சுதந்திரத் தன்மை இக் கண்ணாடியில் பிரதிபலிக்கிறது. யார் எப்பொழுது வந்தாலும் இந்நூலகம் அவர்களிடத்துத் தகுந்த கவனம் செலுத்தத் தவறுவதில்லை. இந் நூலகத்தில் மிகவும் வேடிக்கையான நிகழ்ச்சிகளும் நிகழ்வதுண்டு. ஓர் இளைஞன் தன்னுடைய விடப்பாம்பிற்கு என்ன ஆகாரம் கொடுப்பது என்பதைத் தெரிந்துகொள்ளப் பாம்புடன் வந்ததாக இந் நூலக அறிக்கை ஒன்று கூறுகின்றது. அங்கு மூன்று வருட காலமாக அகராதி ஒன்று தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த ஈப்ரு பணியாளர் எலிசர் பென் ஈடா என்பவர் அவனுக்குத் தேவையான விவரங்களைக் கொடுத்து உதவியதாகவும் அவ்வறிக்கை கூறுகிறது.