பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

செல்லுகின்றனர். அரசாங்க அறிக்கைகள், நீதிமன்றப் பத்திரங்கள், கோயில் பத்திரங்கள், விளம்பரப் பிரசுரங்கள், சொந்த நாட் குறிப்புக்கள் ஆகிய அனைத்தையும் மக்கள் எடுத்துப் படிக்கலாம். இருபத்தைந்திலிருந்து முப்பது மேற்கோள் நூல்கள் வரை ஆராய்ச்சியாளர் ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம். மேலும் ஆராய்ச்சியாளர் இருந்து படிப்பதற்குத் தனியாக அறையும் கொடுக்கப்படுகின்றது. அவ்வறை எல்லா வசதிகளையும் கொண்டிலங்கும். பழங்காலச் செய்திகளைக் கொண்டு விளங்கும் பழஞ் சுவடிகளும் அறிக்கைகளும் தனியாக ஒரு அறையில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இவற்றைத் தங்கள் உயிரினும் மேலாகக் கருதுகின்றனர். கலைப் பகுதி, இசைப் பகுதி, நாடகப் பகுதி முதலிய பகுதிகளில் உள்ள நூல்களும் பொருட்களும் விலை மதிப்பற்றவையாகும். இந் நூலகத்தைப் பெரிதும் பயன்படுத்தியவர்களுள் ஒருவர் இந்நூலகத்தைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

"நான் ஒரு நூலாக இருப்பின் எனது இருப்பிடமாக இந்த நியூயார்க் பொது நூலகத்தையே விரும்புவேன். எனக்கும் படிப்போர்க்கும் இடையே ஒரு தடையும் இருக்காது. ஏனெனில் இங்குள்ள அலுவலர்களது முதல் நோக்கமே நாங்கள் ஒருவரையொருவர் கண்டுகொள்ள வேண்டும் என்பதே ஆகும்."

இக் குறிப்பு ஒன்றே இந் நூலகத்தின் சிறப்பிற்குத் தக்க சான்றாகும்.