ஆறு
மண்ணாங்கட்டி ஒரு சிற்றூரை அடைகிறான். இளங்கதிர் கடலை விட்டு எழுகிறது. அவன் நடக்கிறான். அவன் கண்கள் நாற்புற நிகழ்ச்சிகளையும் துழாவுகின்றன.
அங்கோர் வண்டிக்காரன் ஏறுகால்மேல் உட்கார்த்து மாடுகளை ஓட்டுகிறான். வண்டியில் ஏற்றிய பூச்சுணைக்காய் பின்புறத்தில் நழுகுகின்றது. ஆயினும், அது விழுமுன் ஏந்தி முன்னிருந்த இடத்தில் வைக்கின்றன மண்ணாங்கட்டியின் கைகள்.
தெருத்திண்ணைமேல் தூணிற் கட்டப்பட்ட கன்றுக்குட்டி கால்தவறிக் கீழே விழுகிறது. அதன் உடல் பதைக்கிறது. கழுத்திற் கட்டிய கயிறு நெஞ்சை இறுக்குகிறது. அது தூக்கு மாட்டிக் கொண்ட உடல்போல் தொங்கித் துடிக்கிறது! இந்நிலை அதற்கு ஒரு நொடி. மறு நொடியில் மண்ணாங்கட்டி மீட்சியளித்து அதற்கு முத்தமும் தந்து மகிழ்ந்தபடி நடக்கிறான்.
மண்ணாங்கட்டிக்கு உச்சியினின்று கதிரவன் நெருப்புக் குடை பிடிக்கும் நேரம்! ஒரு குளக்கரையில் இருவர் இலைவிரித்து நிறையச் சோறிட்டு உண்டிருக்கிறார்கள். அக்காட்சியை மண்ணாங்கட்டி பார்க்கிறான். திகைக்கிறான். தன் கையால் அடிவயிற்றைத் தடவுகிறான், அவன் முகம் சுருங்குகிறது.
9