பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதலர்கள் களிப்புறூஉம் காதை

107

பச்சைப் புன்மேல் பன்மலர் பரவிய
தென்றல் வீசும் திருவிடம் ஒன்றில்

25 அன்றிலா யிருவரும் அமர்ந்தனர் நெருங்கி.
என்ன பேசுதல்? யார்முதல் தொடங்குதல்?
என்ன அறியா திருக்கையில் சிறுபோது
அமைதி ஆண்டபின் அகத்துளே நகைத்தனர்.
காளை நோக்கின் கனிமொழி குனிவாள்;

30 அணியிழை நோக்கின் ‘அம்பி’ குனிவான்.
இந்த நாடகம் இனிது முடிந்தபின்,
உந்த எழுச்சி, ஒருவரை யொருவர்
எதிரெதிராக ஏறிட்டு நகைத்தனர்.
புதிரொன்று போடப் புலவன் சூழ்ந்தான்:

35 மேலும் கீழும் மாறி மாறிச்
சால நோக்கினான் சால்பொடு பேசினன்;
விண்ணில் உள்ளது மண்ணில் வந்திடும்
மண்ணில் உள்ளது விண்ணுக் கேகிடும்
என்ன வியப்போ என்று மொழிந்தான்.

40 புரிய வில்லைநீர் புகலுவ தென்றே
அரிவை கூறிட, அம்பி விளக்குவான்:
விண்ணில் கண்ட வெண்ணிலா வதனை
மண்ணில் காண்கிறேன்; மற்றவ் வெண்ணிலா
விண்ணிலே மீண்டும் விளங்கக் காண்கிறேன்

45 என்று கூறிட, ஏந்திழை வினவுவாள்:
விண்ணிலும் மண்ணிலும் எந்த வெண்ணிலா
நண்ணும் மாறி மாறி நவில்கென,

(அம்பிகாபதி)

விண்ணை நோக்கும் வேளை நின்முகம் கண்ணில் தெரியும்உன் கவின்முகம் நோக்கின்


23 புனமேல் - புல்லின் மேல். 28. அகத்துளே - மனத்திற்குள். 29, 30. கனிமொழி, அணியிழை - அமராவதி. 32. உந்த - தள்ள, மேற்பட 34. புதிர் - புரியாத புதுமை. 40. புகலுவது - சொல்வது. 45. ஏந்திழை - அமராவதி.