பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



காதலர்கள் களிப்புறுஉம் காதை

111

மைந்துறு பறம்பு மலையையும் பற்றி
வெந்திறல் வேற்று வேந்தர் வென்றபின்
வந்த முழுநிலா நாளில் வருந்தி
நொந்தவர் பாடிய நுண்பா வருக:

120 “அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்
எந்தையும் உடையே மெங்குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்
வென்றெறி முரசின் வேந்தரெம்
குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே”

125 என்பது அப்பா; இதனை எண்ணின்
மன்பதை முழுதும் மாழ்கும் மாதோ !
என்றறி விக்க, எழிற்றொடி கூறுவாள்:
முன்னர் வந்த முழுநிலா நாளில்
நன்னர் வாழ்ந்த பாரியின் நாரியர்

130 பின்னர் வந்த பெருநிலா நாளில்
இன்ன லுற்ற இவ்வர லாற்றினை
இன்னொரு முறையெற் கியம்பல் வேண்டா.
இன்றைய முழுநிலா நாளில் இருவேமும்
ஒன்றி உள்ளம் உவப்புடன் இருப்பினும்,

135 அடுத்த முழுநிலா நாட்குள் அல்லல்
அடுத்து விடுமோவென அஞ்சுவல் யானென
எடுத்து மொழிய, ஏந்தல் கூறுவான்:
கொஞ்சிக் குலவ வேண்டிய நேரம்
அஞ்ச வேண்டா அதனை யெண்ணி;

140 அடுத்த முழுநிலா அடுக்கும் நாளில்

116. மைந்து - திண்மை, வலிமை. 117. வெந்திறல் - கொடிய வலிமை. 120. முழுதும் - அந்த மாதத்து முழுநிலா நாளில். 121. எந்தை - எம் தந்தை. 123. முழுதும் - இந்த மாதத்து முழுநிலா நாளில்; திங்கள் - மாதம். 126. மாழ்கும் - மயங்கும்; மாதோ - முன்னிலை யசை. 127. எழில்தொடி - அமராவதி. 129. நாரியர் - மகளிர். 130. பெருநிலா - முழுநிலா. 132. எற்கு - எனக்கு. 137. ஏந்தல் - அம்பிகாபதி.