பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

அம்பிகாபதி காதல் காப்பியம்



என்று குறுக்கே இடறி வீழ்ந்த பன்றிப் பயலைப் பார்த்துநெட்டுயிர்த்துக் கம்பரும் நண்பரும் கவன்றனர் பெரிதும்; வம்பப் பயலிடம் வாய்கொடுத் திலரே.

55 "களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீ இ யற்று" என் பதுகுறள்- குடியால் குடிப்புகழ் கொல்லப்படுதலும் மிடிவந் துறுதலும் மேனி கெடுதலும் இன்னபிற தீங்குகள் எல்லாம் அடுத்தலும்

60 உன்னுதல் இலரோ உலகக் குடியர்! குடியன் ஒருவன் குடிக்காப் போழ்து குடித்துள பிறரின் கொடுமை பாரானோ! என்றெலாம் நண்பர் இருவரும் பேசிச் சென்றனர் மாமரச் செறிவினை நோக்கி;

65 அவ்விடம் அடைந்ததும் அமர்ந்தனர் ஓரிடம்; செவ்விதின் கம்பர் செப்பலானார்: நண்பரே உம்மை நானிங் கழைத்தது பண்பறு அம்பிகா பதியின் செயலை அறிவித் தும்மிடம் அவன்குறை யனைத்தும்

70 தெரிவித் தவனைத் திருத்தச் செயற்கே. நாடொறும் இக்கா நண்ணிநூல் எழுதும் பீடுறும் வழக்கம் பெரிதுமுண் டவற்கே. அவன்வரின் யானோ அகன்று விடுவல். இவணவன் தங்கி யிருக்குங் காலை


52.பயல் - சிறுமகன், கீழ்மகன்; நெட்டுயிர்த்தல்- பெருமுச்செறிதல்.

53. கவன்றனர் - கவலைப்பட்டனர். 55-56. குறளின் உரை:

கள்ளுண்டு மயங்கினவனுக்குப் பல காரணங்கள் காட்டி அறிவு புகட்டுதல், நீரின் அடியில் மூழ்கியவனை எரியும் விளக்கால் துருவித் தேடுதல் போன்றதாம். 57. குடிப்புகழ் - குடும்பப்புகழ். 58. மிடி- வறுமை. 60.உன்னுதல் - கருதுதல். 64. மாமரச் செறிவு - மாமரம் அடர்ந்த தோப்பு. 71. இக்கா - இந்தச் சோலை. 72.பீடுறும் - பெருமை பொருந்திய.