பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அம்பிகாபதிக்குக் கண்ணனர் அறிவுறுத்திய காதை 123


அம்பி காபதி தன்கருத் தறைவான்:
எனக்கும் அவட்கும் இடையுள காதல்
தனக்குநல் லொப்பித் தரையில் இல்லை
185 தெய்வக் காதலெம் தொடர்பு தெரிவீர்
தெய்வமாய் எனையவள் தேர்ந்து வணங்குவள்
அவளை மணக்கின் அரண்மனை யாளாய்
அவணிரேன் யானும்; அவளும் அங்கிராள்.
இராமர் இருக்கும் இடமயோத் தியாமால்;
190 நானுள இடமே அவளுள நல்லிடம்
நான்செலும் வழியே நல்லாள் வருவாள்;
உவச்சர் குலத்தனும் உலகை யோம்பும்
தவப்பெருங் குலத்தளும் தாமாய் இணைந்தது
உலகவர லாற்றிலோர் உயர்ந்த இடம்பெறும்;
195 அலகில் மக்கள் அறைவரெங் கதையை!
புல்லிய எம்மைப் போழ்க்க முயல்வது
கல்லில்நார் உரிப்பதைக் கடுப்பதாகும்.
காதல் காதல் காதல் இலையேல்
சாதல் சாதல் சாதல் என்பதே
200 என்னுடை முழக்கம் என்றனன் அம்பி.
உன்னையான் திருத்துதல் ஒல்லுமோ வாழ்கென
நன்னர் வாழ்த்தி நடந்தார் அவரே.
உறங்கு வோனையே எழுப்ப ஒல்லும்;
உறங்குவோன் போல நடிக்கும் ஒருவனைப்
205 பிறங்கச் செய்தல் பெரிதும் அரிதரோ.


184. ஒப்பித் தரையில் ஒப்பு இத்தரையில்; தரை - பூவுலகம். 188. அவண் - அங்கு. 191. நல்லாள்.அமராவதி. 192. ஒம்பும். காக்கும். 193 தவப்பெருங் குலத்தள்-மிகஉயர்ந்த அரசகுலத்தாள். 196. புல்லிய - இணைந்த, போழ்க்க - பிளக்க, பிரிக்க. 197. கடுப்பது - ஒப் பது. 203. ஒல்லும் - இயலும், முடியும். 305. பிறங்கச் செய்வது - (எழுப்பித்) தெளிவு பெறச்செய்வது; அரிதரோ - அரிது அரோ; அரோ - அசைச்சொல்.