பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126 அம்பிகாபதி காதல் காப்பியம்


கன்னி யொருத்திபால் காமங் கொண்ட
அன்ன வனைச்சிறை அடைத்தது நன்றே!
இன்னும் கேட்க! இதுபோ தாது;
கொலைசெய் குற்றம் அவன்மேற் சுமத்தி

50 தலைகொய் வதுவே தக்க ஒறுப்பாம்
என்றவள் இயம்ப, இருவரும் சேர்ந்தே
ஒன்றி நகைத்து உவகை யுற்றனர்.
அம்பி காபதி அந்த உருவில்
வந்ததை நங்கை வகையா யறிந்தனள்;

55 அந்தக் கணமே அவளறிந் துளாளென
எந்த விதமோ ஏந்தலும் அறிந்தான்
இருவரும் ஒன்றி இளித்தனர்; இதன்பின்,
மருவுறும் உளத்தொடு மகிழ்ச்சியில் திளைத்து
வேறு கோலம் வேய்ந்ததன் காரணம்

60 கூறு கென்று குளிர்மொழி வினவ,
அம்பி காபதி அறைய லுற்றான்:
கன்னி மாடக் காவகப் பாங்கர்
என்னைக் கண்ட ஏவலாள் ஒருவன்,
வேந்தனின் காவலர் தவிர வேறு

65 மாந்தர் இவ்விடம் மன்னலா காதென
வேந்தன் ஆணை விடுத்துள் ளமையால்
இவ்விடம் வராதே என்று விரட்டவே,
அவ்விடம் விட்டியான் அறிந்த காவலன்
ஒருவன் வீடுபோய் உடையெலாம் பெற்று

70 மருவினன் ஈண்டு மன்னரின் ஆள்போல்;
இதுதான் நடந்த கதையென இயம்பினான்.
எதுவா யினுஞ்சரி, இனியிரு வேமும்
கன்னி மாடக் கள்ளக் காப்பறை


50. ஒறுப்பு - தண்டனை. 56. ஏந்தல் - அம்பிகாபதி. 59.வேய்தல் - அணிதல், பூணுதல். 60. குளிர் மொழி-அமராவதீ. 65. மன்னல் - பொருந்துதல் (வருதல்). 72. இருவேமும் - இருவரும்.