பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதலர்கள் கலந்து மகிழ்ந்த காதை 133

19. வேந்தன் ஊரலர் உணர்ந்த காதை

தும்பியும் மலருமாய்த் தொடர்ந்து துய்க்கும்
அம்பிகாபதி பற்றியும் அமராவதி குறித்தும்
வம்பலர் நகரில் வழங்குவ தாக
ஒற்றரால் அறிந்தே உண்மை காணக்

5 கொற்றவன் மாறு கோலம் பூண்டு
நகர மறுகில் நகர்க்கா வலரை
நிகரச் சுற்ற நினைந்து போந்தான்.
மெய்க்கா வலரை மிக்க தொலைவில்
எய்க்காது வரும்படி ஏவித் தானோர்

10 உழவன் போல உருவம் பூண்டு
கிழவன் நேரக் கிடுகிடு நடுக்கங்
கொண்டு கையில் கோலை ஊன்றிக்
கொண்டு நடக்கையில், குறுக்கிலோர் பித்தன்
வந்து நின்று வழியை மறித்தனன்;

15 தண்ணீர் இயையாத் தாமரை மானத்
தண்ணீர் நனையாத் தானை சுற்றியோன்,
இழையெனச் சுள்ளியும் என்பும் அணிந்தவன்,
தழையும் வேரும் கட்டிய தாரன்,
தண்ணீர் காணாத் தலையன், உடலெலாம்

20 மண்ணைப் பூசியோன், மரத்த தோலினன்,


தலைப்பு : அலர் - பரவும் பழிச் சொல். 1. தும்பி -வண்டு. 3.வம்பலர் - வம்பு அலர் - வம்பான அவர்; வழங்குவது - பலராலும் பேசப்படுவது. 5. கொற்றவன் - அரசன். 6. மறுகு - தெரு. 7.விகர - போல. 3.எய்க்காது - இளைக்காது, சளைக்காது. 11.நேர - போல. 13. பித்தன் - பைத்தியக்காரன். 15. இயையா - ஒட்டாத. 16.தானை - துணி.17. இழை - அணிகலம்; என்பு - எலும்பு. 18.தாரன் - மாலையன். 20. மரத்த - உணர்ச்சியற்ற.