பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140 அம்பிகாபதி காதல் காப்பியம்


பல்வேறு காய்களால் பதமுறும் அவியல்;
அரியல் வகைபல, பொரியல் வகைபல,

55 வறுவல் வகைபல, வகைவகைச் சீவல்;
வாதுமைப் பருப்பு, வன்சாரப்பருப்பு,
முந்திரிப் பருப்பின் முதிர்ந்தநெய் வறுவல்;
அப்பளம், அரிய முறுக்கு வற்றல்,
பப்பளம், காசி வற்றல், பதமுறு

60 குண்டுவற் றலொடு கூர்பல் வறுவல்;
பயறுச் சுண்டல் வகைகள் பலவாம்;
பல்வகைப் பண்ணியம், பல்வே றப்பம்,
பூசனி வெல்லம் பூத்த இனிப்பு,
எள்ளு ருண்டை, எருக்கங் கொழுக்கட்டை,

65 பால்கொழுக் கட்டை, பருப்புக் கொழுக்கட்டை,
பொரிவிள உருண்டை,பூம்பால் கட்டி,
இனிப்புநெய் யுருண்டை, இன்சுவைக் கட்டி,
இனிப்புக் கிண்டல், இன்னபிற இனிப்புகள்;
திருகு முறுக்கு, தெவிட்டாத் தேன் குழல்;

70 உளுத்தம் வடையொடு கடலை வடைவகை,
வாழையும் உருளையும் வைத்த வடைவகை,
தயிரில் ஊறிய தள தள மெதுவடை,
மோர்க்கு ழம்பில் மூழ்கிய வடைவகை,
பல்வேறு சாற்றில் ஊறிய பல்வடை;

75 தேனா யினிக்கும் தேமாங் கனிவகை,
தேனில் ஊறிய தீம்பலாச் சுளைவகை,
வாழ வைக்கும் வாழைக் கனிவகை,


60.கூர் - மிகுந்த 63. முழுதும் - இக்காலத்துக் 'காசி அல்வா போன்றது. 64. எருக்கங் கொழுக்கட்டை - எருக்கங்காய் வடிவத்தில் செய்யும் கொழுக்கட்டை. 66. பூம்பால் கட்டி - 'பால்கோவா போன்றது. 67. இன்சுவைக்கட்டி - இக் கால 'கேக்' போன்றது. 68. இனிப்புக் கிண்டல் - இக்கால 'சொஜ்ஜி' போன்றது. 71. வாழை-வாழைக்காய்; உருளை - உருளைக்கிழங்கு; முழுதும் - இக்கால 'பஜ்ஜி வகை.