பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142 அம்பிகாபதி காதல் காப்பியம்


உண்டல், தின்றல், உறிஞ்சல், பருகல்
என்னும் நால்வகை இயைந்தவூண் பொருள்கள்

105 மன்னும் மலையென மண்டி யிருந்தன.
மிக்க நீளமும் மிகுந்த அகலமும்
தக்கவா யமைந்த தலைவாழை இலைகள்
பரப்பி உண்டிகள் படைக்கப் பட்டன;
உண்டியோ டிலையில் ஒருநீள் கரண்டியும்

110 கண்டவர் அதற்குக் காரணம் வினவ,
இலைகள் பெரிதா யிருத்தலின் எட்டி
யிருக்கும் பொருள்கள் எட்டா வாதலின்
கரண்டியா லிழுத்துக் களிப்பொ டுண்ணலாம்
என்னும் நோக்கொடு இலையில் கரண்டி

115 வைக்கப் பட்டதாய் வளவன் கூற,
எட்டா தாயின் எழுந்தெழுந் தேகி
எடுத்துவந் துண்ணலாம் என்று கம்பர்
அடுத்துக் கூற அனைவரும் நகைத்தனர்.
நீண்ட வரிசையாய் நீள்புகழ்ப் புலவோர்

120 ஆண்டு நண்ணி அமர்ந்தனர் மகிழ்ந்து;
கம்பர் பக்கலில் கவின்மிகு புலவன்
அம்பி காபதி அமர்ந்திருந் தனனே.
அமரா வதிவந் தனைவரும் உண்ணப்
படைத்துக் கொண்டே பரிவுடன் சென்றாள்.

125 அடுத்துள புலவோர் அனைவரும் தலைக்கொரு
பாடல் இயற்றிப் பாடவேண் டுமெனத்
தேடரும் புகழ்சால் வேந்தன் தெரிவிக்க,
ஒவ்வொரு புலவரும் ஒவ்வொரு பாடல்
செவ்விதின் பாடினர்; செறிந்த வரிசையில்

130 அம்பிகா பதிமுறை அடுத்த போழ்தில்
அமராவதி இயற்கையாய் அவற்குப் படைத்தாள்.


104. ஊண் பொருள்கள் - உணவு வகைகள். 115. உளவன்- சோழன். 124. படைத்துக்கொண்டே - பரிமாறிக் கொண்டே; பரிவு - அன்பு. 129. செறிந்த - நெருங்கிட.