பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

அம்பிகாபதி காதல் காப்பியம்

மணிமே கலையெனும் மாண்புறு காப்பியம்
படித்துளாய் அதிலொரு நிகழ்ச்சி பகர்வேன்:

25 உதய குமரனும் ஒழுங்கிலாச் சோழ
மன்னன் மகன்றான் மணிமேகலையாம்
பெண்ணின் அழகில் பேதுற்று முயங்க
விரும்பிக் காம வெறிகொண் டலைந்தான்.
கரும்பினும் இனியவக் கன்னியின் தோழி

30 சுதமதி யென்பாள் சொல்லுவாள் அறிவுரை
மதிமயங் கிட்ட மன்னன் மகற்கே!
இளைய அரசே இயம்புவன் கேணி!
அலைய வேண்டா அவளே விரும்பி,
காக்கைக் கேயிரை யாகிக் கழிவதாம்

35 யாக்கையின் இழிவு யாதும் அறியாய்.
“வினையின் வந்தது வினைக்குவிளை வாயது
புனைவன நீங்கில் புலால்புறத் திடுவது
மூப்புவிளி வுடையது தீப்பிணி யிருக்கை
பற்றின் பற்றிடம் குற்றக் கொள்கலம்


40 புற்றடங் கரவின் செற்றச் சேர்க்கை...”
என்று சுதமதி இயம்புவதாகக்
கம்பர் கழறிக்கொண் டிருக்குங் காலை,
அம்பி குறுக்கிட் டறைய லானான்:
அப்பா நிறுத்துக அதன்மேல் எச்சம்

45 தப்பா மலியான் தகவாய்த் தொடர்வேன்:


25. உதயகுமரன் - சோழ இளவரசன். 27. பேதுற்று - மயங்கி; முயங்க-புணர. 32 கேணி - கேள்நீ 35. யாக்கை - உடம்பு. 37. புனைவன - அணிந்திருக்கும் ஆடைஅணிகலம் முதலியன. புலால்-மாமிசத் தோல்; புறத்திடுவது - வெளிக்காட்டுவது; நறுமணப் பொருள்கள் புனையாவிடின் புலால் நாற்றம் வீசுவது என்றும் பொருள் கொள்ளலாம். 38. விளிவு - சாவு. 40. புற்றடங்கரவு - புற்றிலுள்ள பாம்பு; செற்றம் - சினம்; சேர்க்கை - இருப்பிடம். 44. அப்பா - தந்தையே; எச்சம் - மீதி.