பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

அம்பிகாபதி காதல் காப்பியம்

நினைவின் அகற்றினே நீயுய்வு பெறலாம்.
துளக்குமுன் செயலால் தொல்லை யடைந்து
விளக்கில் வீழ்ந்த விட்டிலா காதே

75 உன்றன் தங்கைபால் ஒருவன் வந்தே
ஒன்றுதல் இல்லா உரைதொடுத் திடினே
உனக்குப் பெருஞ்சினம் உறுவ துறுதி.
தனக்கு வருவது தான்பிறர்க் கென்றும்
நினைக்க வேண்டும் நெடிதிதை யுணர்கென,

(காவிரி கூறுதல்)

80 கம்பர் மகளாம் காவிரிப் பெயராள்
இம்பர் வந்து இயம்புவாள் ஒன்று:
எந்தாய் நெருநல் விருந்துக் கேகினீர்
எந்தாய் தானும் வெளிச்சென் றிருந்தாள்
அந்த வேளையான் தனியாய் அமர்ந்தே

85 சிறந்த குறள் நூல் செவ்விதின் ஒதினேன்.
திறந்த வீட்டில் தெருநாய் நுழைந்ததென
அப்போ திளைய அரசாம் கிள்ளி
தப்பாம் முறையில் தனித்து வந்தே
என்னைக் கெடுக்க எண்ணி முயன்றான்.

90 மன்னன் மகனை மறுத்தியான் கடிய,
உன்னுடை அண்ணன் ஒவ்வா முறையில்
என்னுடைத் தங்கை அமரா வதியை
விரும்பும் போதியான் நின்னை விரும்புதல்
பெரும்பழி யாமோ பேசுக என்ன,

95 உன்னுடைத் தங்கையும் உறுதியாய் விரும்பின்
என்னுடை அண்ணன் காதல் இயைவதாம்;


73. துளக்கும் - கலக்குகின்ற. 74. விட்டில் - ஒருவகைப் பூச்சி 76. ஒன்றுதல் - பொருந்துதல். 82. எந்தாய் - எம் தந்தையே; நெருநல் - நேற்று. 83. எந்தாய் - எம் அன்னை. 87. கிள்ளி - சோழ இளவரசன். 91. ஒவ்வா - பொருக்தாத,