பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22. ஆரப் பூச்சால் அரசன் ஆய்வு

செய்த காதை

மன்னன் அமைச்சனை மறுபடி அழைத்தே
என்ன உளவால் இவர்தம் களவை
அறிய வியலுமென் றமைச்சரே ஒருவழி
தெரியக் கூறுமின் தெள்ளிதின் என்ன,

5 காடவன் ஒருவழி கண்டு கூறுவான்:
நாடரும் புலவர் நல்லவை யொன்று
வெட்டிக் கூறி வெல்லும் அறிஞராம்
ஒட்டக் கூத்தரின் உயரிய தலைமையில்
கூட்டித் திருக்குறள் கூடி ஆய

10 நாட்டங் கொண்டதாய் நவின்றனை வரையும்
சொற்பொழி வாற்றச் சொல்லுவம்; கம்பரின்
அற்புறு மகற்கும் அழைப்பு விடுப்போம்;
அனைவரும் அமர்ந்தபின் அவர்தமக் காரம்
நனையப் பூசி நல்வரவு கூறுவம்;

15 அமரா வதியிடம் அரிய திருக்குறள்
படியொன் றுளதாய்ப் பகர்ந்தம் பிகாபதியை
நொடியில் சென்று நூல்பெற்று வருகென
அனுப்புவம்; அவன்செலின் அங்கே இருவரும்
அணைப்பதும் செய்யலாம்; அதனால் ஆரம்

20 மார்பில் கலைந்து மாண்பற் றிருப்பின்
தேர்வம் அவர்தம் திருட்டினை நன்கென,


4. தெள்ளிதின்-தெளிவாக. 6. நல்லவை-நல்லசபை. 12. அற்புறு - அன்பு பொருந்திய 13. ஆரம் - சந்தனக் குழம்பு. 16. படி - பிரதி. 20. மாண்பற்று - அழகற்று (கலைந்து). 21. தேர்வம் - தெளிவாய்த் தெரிந்துகொள்வோம்.