பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரப் பூச்சால் அரசன் ஆய்வு செய்த காதை

155

துவளுறச் சாந்து தோய்ந்திருப் பதனைக்
கண்டு சாந்து வந்த காரணம்
விண்டு விளம்புக என்று வினவ,
தோழி வந்துமேல் துணியின் மீதே

50 கேழுறு சாந்தினைக் கேளிக்கை யாகப்
பூசினள் என்றவன் புகல, வேந்தன்,
ஆசிலுன் தோழி ஆணுரு வத்தில்
வம்பாய் வந்தனளோ? வனிதை யவள்பெயர்
அம்பிகா பதியோ? அறிவிலாப் பேதாய்?

55 ஈரமில் அம்பிகாபதி இவ்விடம் வந்தே
ஆர மார்பால் அனைத்தனன் உன்னை;
அதனால் ஆடை அடைந்த திந்நிலை;
இதனையொப் புவையோ இல்லென மறுப்பையோ!
குலத்தைக் கெடுக்குங் கோடரி யானாய்

60 உளத்தில் என்ன உறுதி உனக்கு?
புலிக்குப் பிறந்த பூனை என்றும்
அரிமா பெற்ற நரிமா என்றும்
அம்பிகா பதியை அன்று வைதேன்
நம்ப வியலா நங்கை யுன்னையும்

65 இன்றதே விதமாய் இழிவு படுத்தி
ஏசியும் என்ன பயனுறும் இழிந்த
வேசியுன் முகத்தில் விழிப்பதும் தீதென
நமன்போல் நவின்று நடுங்கச் செய்தனன்.
அமரா வதிதான் அழுது கொண்டே

70 எந்தையே என்பிழை பொறுத்தருள் கென்று
தந்தையின் தாள்களைத் தாழ்ந்து பற்றினாள்.
உற்ற பாம்பினை உதறுதல் மானப்


46. சாந்து - சந்தனச் சாந்து 48. விண்டு - மனம் திறந்து. 50. கேழ் - நிறம்; கேளிக்கை - விளையாட்டு, வேடிக்கை. 51. புகல - சொல்ல. 52. ஆசிலுன்-ஆசுஇல் உன்; குற்றம் இல்லாத உன்னுடைய, ஆசு - குற்றம். 55. ஈரமில் - ஈரம் இல்லாத; ஈரம் - குளிர்ச்சி, பண்பு. 67. வேசி - விலைமகள். 68. நமன் - எமன்.