பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

அம்பிகாபதி காதல் காப்பியம்

சீரார் குணாதித்தன் சேய் அமையப் பாடினான் காரர்கா குத்தன் கதை

என்பதாகும். (சகரர் ஆயிரத்து நூறு ஒழித்து - பன்னிரண்டாம் நூற்றாண்டு; குண ஆதித்தன் சேய் - கம்பர்; காகுத்தன் - இராமன்.) இப் பாடல், கம்பர் பன்னிரண்டாம் நூற்றாண்டினர் என்னும் கருத்துடையது.

மற்றொரு சான்று:— சோழ நாட்டை விட்டு வெளியேறிய கம்பர், இறுதியாகப் பாண்டிய நாடு அடைந்து இயற்கை எய்தியதற்கு முன், (தொண்டைநாடு எனப்படும் பல்லவ நாடு சோழர் கைக்கு மாறியதால் அங்கே தங்காமல்) ஆந்திர அரசனாகிய ஓரங்கல் நாட்டுப் பிரதாபருத்திரனிடம் சென்று சிறிது காலம் தங்கியிருந்ததாக ஒரு வரலாறு கூறப்படுகிறது. இந்தப் பிரதாபருத்திரனும் ஒட்டக் கூத்தரால் உலாப் பாடப்பெற்ற சோழ மன்னர்களும் பன்னிரண்டாம் நூற்றாண்டினர் எனச் சில கல்வெட்டுகள் கூறுகின்றன. பிரதாபருத்திரனோடு தொடர்பு கொண்ட கம்பரும் இக் காலத்தவரே. எனவே, கம்பர் மகன் அம்பிகாபதி வரலாறு நிகழ்ந்த காலமும் பன்னிரண்டாம் நூற்றாண்டே என்பது சொல்லாமலே விளங்கும்.

கதை நிகழ்ந்த இடம்:

முதலாம் இராச ராசனுக்குப் பின் அவன் மகன் முதலாம் இராசேந்திர சோழன் தலைநகரைத் தஞ்சையிலிருந்து கங்கை கொண்ட சோழபுரத்துக்கு மாற்றிவிட்டதாலும், அவனுக்குப் பின் ஆண்ட சோழர்களும் கங்கைகொண்ட சோழபுரத்தையே தலைநகராகக் கொண்டதாலும், அம்பிகாபதி வரலாறு நிகழ்ந்த இடம் கங்கைகொண்ட சோழபுரம் எனலாம்.

கதை மாந்தர்கள்:

கம்பர் மகன் அம்பிகாபதியால் காதலிக்கப்பெற்ற அமராவதி என்பவள், இரண்டாம் குலோத்துங்கச் சோழ மன்னனின் மகளாக இருக்கலாம் என ஒருவாறு கருதப்படுகிறது;