பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அம்பிகாபதியைக் கொல்ல அரசன் சூழ்ந்த காதை 161


80 ஆக்கமில் புலவன் அம்பி காபதி
அமரா வதியை அடைய நினைக்கிறான்;
கம்பர் வந்து கன்னியைக் கேட்டுளார்;
வம்பாம் இதற்கு வழியொன்று கூறுகென,
ஒட்டக் கூத்தர் உரைக்க லானார்:

85 கம்பர் மகனோ கவைக்குத வாதவன்,
காதல் கலைஞன், காம வெறியன்,
காதல் பாட்டே கதைப்பான் என்றும்;
அகப்பொருள் தழுவாப் பாடல் ஆக்கும்
உகப்பிலா னாதலின் உமக்கொன் றுரைப்பல்:

90 அம்பிகை யின்மேல் அகப்பொருள் தழுவாச்
செம்பொருள் சிறக்க அமைத்துச் செவ்விதின்
பாடல் நூறு பாடித் தரினே
நாடருங் கன்னியை நல்கிடு வேனெனக்
கம்பர்க் குரைப்பின் கதையும் முடிந்திடும்;

95 நம்பியென் கூற்றை நயமாய்ச் செயல்படின்
அம்பி காபதி அறவே தோற்பனென்
றோட்டக் கூத்தர் உரைத்தே கியபின்,
காடவன் எழுந்து காவலற் குரைப்பான்:
ஈடில் கன்னியைக் கொள்ள எண்ணின்

100 அம்பி காபதி அகப்பொருள் தழுவாது
அம்பிகை யின்மேல் நூறுபா ஆக்கித்
தருவான் என்னில் தருவேன் கன்னியை;
மருவிடின் அகப்பொருள் மாய்ப்பேன் அவனை;
என்று கம்பர்பால் எடுத்துக் கூறுகென,

105 அரசனவ் வாறே கம்பரை அழைத்தே
உரைசெயக் கம்பரும் ஒப்பிய வர்போல்
அம்பி காபதி அகப்பொருள் தழுவாது


80. ஆக்கம் - வளர்ச்சி, முன்னேற்றம். 85.எவை - தேவை,வேலை 89.உகப்பிலான் - விருப்பம் இல்லாதவன். 95.கூற்றை - பேச்சை, 96. அறவே - முற்றிலும். 103. மருவிடின் - கலந்தான்.

அ.-11