பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24. கட்டுத் தறி கவி பாடித் தந்த காதை

அம்பிகாபதி ஒரு நாள் அகத்தில் அமர்ந்தே
அம்பொருள் பாப்பல ஆய்ந்த காலை,
உண்மைப் புலவன் நான் என்றுரைத் தொருவன்
அண்மையில் வந்தே அமர்ந்து கொண்டனன்.

5 அம்பி காபதி அவனை நோக்கி
நீயார் நின்பெயர் என்னென வினவ,
உள்ளதே உரைக்கும் உண்மைப் புலவனான்;
கொள்ளுவர் என்பெயர் 'குப்பையா' என்று.
கம்பர் வீட்டுக் கட்டுத் தறியும்

10 கவிபாடும் என்று கழறக் கேட்டுளேன்
ஆகவே உம்மிடம் அரியபாப் பெற்றுப்
போகவே வந்துளேன் என்றவன் புகல,
உண்மைப் புலவனென் றுரைக்கின் றாயே
உண்மைப் பாச்சில உரையென, அவனும்,

15 வெண்மைப் பாச்சில விளம்ப லானான்:

(குப்பையா)



(1) "பாக்காவது கமுங்காய், பழமாவது கனியாம்,
நாக்காவது நரம்பிலாதது, நாய்வால் நிமி ராது,
வாக்காவது வாய்திறப்பின் வந்துபேரொலி செய்யும்,
மூக்காவது கண்களின்கீழ் முகத்தினிலே தெரியும்."

20 ஆகா ஆகா! உண்மை உண்மையென
அம்பிகா பதிசொல, அதன்மேல் பாடுவான்:




2. அம்பொருள் - அழகிய சிறந்த கருத்து. 15. வெண்மை - எளிமை.