பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25. அம்பிகாபதியும் சிம்மனும்

அமர் புரிந்த காதை

குப்பையா வுக்குப் பாடல் கொடுத்தபின்
தப்பா துநாளும் தான்சென் றெழுதும்
மாமரத் தோப்பின் மையம் அடைந்து
பாமர ரும்புகழ் பைந்தமிழ்ப் புலவன்

5 அம்பி காபதி அமர்ந்தெழு தலானான்.
அம்மாந் தோப்பினை அரும்படைத் தலைவன்
சிம்மனுஞ் சேர்ந்து செந்தமிழ் எழுதும்
அம்பியை வம்புக் கழைக்க லானான்:
புலவரே பொழுது போக்க அமைதி

10 நிலவுமிவ் விடத்தை நீரடைந் தீரோ!
"நாய்கெட்ட கேட்டுக்கு மாநிழலா" என்ப;
நாய்தனின் சிறந்த நல்லவராதலின்
உமக்கிச் சோலை உரியதே யாகும்.
நமக்குள் பேசுவம் நானொன்று கேட்பல்:

15 புளியங் கொம்பினைப் பிடித்தாற் போல
எளியராம் நீவிர் இந்நாட்டரசனின்
அருமை மகளாம் அமரா வதியைத்
திருமணங் கொள்ளத் திருவுளங் கொண்டதாய்ச்
செவிமடுத் தேனியான் செப்புவ துண்மையோ?

20 கவிமடு புலவரே கழறுவீர் இறையென,
அம்பி காபதி அவற்கிறை விடுப்பான்:
வம்பு செய்ய வந்துளீர் என்னிடம்
என்மணம் பற்றி ஏன்நீர் கவல்கிறீர்?


11. என்ப - என்பர். 19. செவி மடுத்து - காதால் கேட்டு. 20. கவி மடு - கவிவன்மை மிகுந்த; 21. இறை - பதில். 23. கவல்கிறீர் - கவலைப்படுகிறீர்.