பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



காலமும் கதை மாந்தரும்

15

கம்பரோடு தொடர்புடைய ஒட்டக்கூத்தர், இம் மன்னனுக்கு அவைக்களப் புலவராய் இருந்ததோடு தமிழ் கற்பித்த ஆசானகவும் திகழ்ந்தார் என்று சொல்லப்படுகிறது.

அம்பிகாபதி—அமராவதி காதல் வரலாற்றுப் பகுதி இந்தச் சோழ மன்னன் வரலாற்றில் குறிப்பிடப்படவில்லையே எனக் சிலர் எண்ணலாம். அரசர்கட்கு மனைவியர் பலரும் மக்கள் பலரும் இருப்பது இயற்கை. மக்களுள் ஒவ்வொருவரின் வாழ்க்கையைப் பற்றியும் மன்னரின் வரலாற்றில் சேர்க்கவேண்டுமெனின் அதற்கு எல்லையே இல்லாமற் போகும். பேரரசன் ஒருவனது வரலாறாகிய பெருங்கடலில், அவன் மகள் ஒருத்தியின் காதல் வரலாறு ஒரு துளியாகும். எனவே, இந்தக் காதல் வரலாற்றை மன்னரின் வரலாற்றில் எதிர்பார்ப்பதற் கில்லை.

அம்பிகாபதி காதல் காப்பியத்தில் இடம் பெற்றுள்ள கதை மாந்தருள் (கதா பாத்திரங்களுள்) ஒரு சிலரின் பெயர்கள் உண்மையான வரலாற்றில் உள்ளனவாகும். வேறு சிலரின் பெயர்கள், காப்பிய ஆசிரியர் இட்ட கற்பனைப் பெயர்களாகும். காப்பியக் கதை மாந்தர்களின் பெயர்கள் வருமாறு:

குலோத்துங்கன்—சோழ மன்னன், அமராவதியின் தந்தை. சோழமாதேவி—குலோத்துங்கனின் மனைவி. அமராவதி (அமரு)—சோழன் மகள், காப்பியத் தலைவி. கிள்ளி—சோழன் மகன். கம்பர்—பாவேந்தர், அம்பிகாபதியின் தந்தை. கற்பகத் தாச்சி—கம்பரின் மனைவி. அம்பிகாபதி (அம்பி)—கம்பர் மகன், காப்பியத் தலைவன். காவிரி—கம்பர் மகள். கண்ணனர்—கம்பரின் நண்பர். காடவன்—சோழனின் அமைச்சன். கமலி—காடவனின் மனைவி.