பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

178 அம்பிகாபதி காதல் காப்பியம்

சொந்த ஓலை யில்லெனச் சொல்கிறேன்;
நேற்று நீ கொணர்ந்த நெட்டோலை பழையது
ஈற்றுப் பாவுள இஃதோ அழகிது.
காப்புப் பாவொடு தொண்ணூற் றொன்பது
100 யாப்பும் நூறாம் யாப்பும் எழுதிய
ஓலைகள் அனைத்தும் ஒத்திருத் தலை நீ
சாலவும் நோக்கிச் சாற்றுவாய் உண்மை
என்றே அம்பியை இறையவன் கடாவ,

(அம்பிகாபதி)


ஈற்றுப் பாவிங் கெழுதிய வோலை
105 நேற்றிங் கிறையவர் நேர்ந்தீந் ததேயாம்;
இதிலுள கையெழுத் தெனதே; மற்றும்
எதில்சூ துளதென இயம்புவன் கேண்மின்:
அரசரும் அமைச்சரும் ஆரச் சூழ்ந்தே
உரைசெய வொண்ணா வஞ்சம் ஒன்றினை
110 எனது தலையில் ஏற்றிக் கட்டினர் ;
இனிது விளக்குவல் இப்பெருஞ் சூழ்ச்சியை :
'குப்பையா' எனும் பெயர் கூறிக் கொண்டும்
உண்மைப் புலவனென் றுரைத்துக் கொண்டும்
ஒருவன் என் மனை ஒருநாள் வந்து

115 மருவும் அகப்பொருள் பாவொன்று மாண்புற
எழுதித் தருகென என்னை வேண்டினான்;
எழுதும் ஓலையும் ஈந்தான் அவனே.
எழுதித் தருவதாய் இசைந்தேன் யானும்.
அவன்வரும் போழ்தில் அகல்தெரு முற்றத்து
120 எவனோ வருகிறான் என்றுநின் றிருந்தேன்;
வண்டி யொன்றிலோர் வனிதை யமர்ந்து
கொண்டு போனதைக் கூர்ந்து நோக்கினேன்;

100. யாப்பு - பாட்டு. 108. ஆர-பொருந்த. 115. மருவும் அகப் பொருள் - அகப் பொருள் கருத்துத் தடிவிய.119. அகல் - அகன்ற, விசாலமான. 121. வனிதை - பெண்.