பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அம்பிகாபதி சிறையில் அடைபட்ட காதை

185

50 திடமுடன் மறுத்தால் தெரிவு வேறிலை.
காதலில் தோல்வி கண்டு வீணே
சாதல் என்பது சரியிலை சிறிதும்;
ஒருவரைப் புணர்ந்தபின் உவரை விட்டுமற்
றொருவரைப் புணர்தல் ஒழுங்கிலை; இதனால்,

55 ஆடு மாடு போன்றவ ராவோம்
பீடுறு மக்களாய்ப் பீத்தவொண் ணாதே.
பொருந்தாக் காதல் பொல்லாங் குடைத்து
பொருந்திய மணமே புகழ்ச்சிக் குரியது.
என்றே பற்பல எண்ணி யிருக்கையில்,

50 கம்பரும் அன்னை கற்பகத் தாச்சியும்
வெம்பி வெதும்பும் தங்கை காவிரியும்
அரசன் இசைவொடு அம்பியைக் காணக்
கரிசனத் தோடு காவற் சிறைக்குள்
புக்கனர் அம்பியைக் கண்டு பொருமினர்

65 புக்கது விண்ணில் பொருமிய பேரொலி.
உம்பர் உலகுக் கியாமும் வருவமெனக்
கம்பர் அம்பியைக் கட்டிப் புரண்டார்.
கற்பகத் தாச்சி கண்ணீர் சொரிந்து
அற்புறு மகனே அம்பிகா பதியே

70 கண்ணே மணியே கன்னலே கண்டே!
என்னே எமைவிட் டேகுகின் றனையோ !
உன்னைப் பிரிந்திவ் வுலகில் வாழ்வனோ?
என்றே அரற்றி எண்ணிலா முத்தம்
முகத்தில் மட்டுமா உடம்பு முழுதும்

75 உகுத்தகண் ணீரொடு ஒருங்கே பொழிந்தாள்.
தங்கை காவிரியோ தமையனை நோக்கி


50. தெரிவு - தேர்ந்து செய்யும் செயல். 53. உவரை - அன்ன 56. பீத்தல் - பெருமை பேசுதல். 63. கரிசனம் - அன்பு. 64. பொருமினர் - தேம்பி யழுதனர். 66. உம்பர் உலகு - தேவ உலகம். 69. அற்பு - அன்பு. 73. அரற்றி - அழுது. 75. உகுத்த - சிந்திய; ஒருங்கே - ஒரு சேர.