பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அம்பிகாபதி காதல் காப்பியம்

பதிகம்

[கதை பொதி பாட்டு]

உலகம் பரந்த ஒண்டமிழ் மொழியில்
இலகும் காப்பியம் ஒன்றீ கெனவே
பைந்தமிழ் வளர்க்கும் பரவைசார் புதுச்சேரிச்
செந்தமிழ்ப் புரவலர் சிங்கார குமரேசனர்
5 தூண்ட, அந்தத் தொண்டினை நிறைத்திட
வேண்டி முயன்று, வியன்றமிழ் மொழியில்
ஈண்டு புகழ்சால் இராம காதையை
விரிந்த நூலாய் விளக்கி யருளிய
பரந்த சீருறு பாவேந்தரின் வேந்தராய்
10 விளங்கித் திகழ்ந்த வீறுசால் கம்பர்
இலங்கிடப் பயந்த இன்றமிழ்ப் புலவன்,
சொற்போர் புரிவதில் சோராத் திறலோன்,
மற்போர் புரியும் மறத்திலும் விறலோன்,
காதல் பாவல் காதற் கலைஞன்,
15 ஓத இனித்திடும் உயரிய நூலாம்
‘அம்பிகாபதி கோவை’ அருளிய செல்வனாம்

2. இலகும் - விளங்கும்; ஒன்றீ கெனவே - ஒன்று ஈக எனவே - ஒன்று இயற்றித் தருக என்று. 8. பரவைசார் - கடற்கரையைச் சார்ந்த, 4. புரவலர் - காப்பாளர். சிங்கார குமரேசனர்-புதுச்சேரியில், இந் நூலாசிரியர் பல நூல்களே எழுதுமாறு தூண்டியும் பொருளுதவி புரிந்தும் பல நூல்கள் வெளிவரச் செய்த புரவலர். 7. ஈண்டு - மிகுந்த, இராம காதை - இராமன் வரலாறு (இராமாயணம்), 9. பாவேந்தரின் வேந்தர் - கவிச் சக்கரவர்த்தி. 10. வீறு - சிறப்பு. 11. இலங்கிட - விளங்க; பயந்த - பெற்ற. 13. திறலோன் - திறமைசாலி. 13; விறலோன் - வெற்றியன். 14. காதல் பாவல் - காதல் பாடுவதில் வல்ல. 16. அம்பிகாபதி கோவை - அம்பிகாபதி தன் பெயரால் எழுதிய ஒரு நூல்.

அ.—2