பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அம்பிகாபதி சிறையில் அடைபட்ட காதை 189.


வண்ண மலரென வடிவம் புனைவதால்
கண்ணுறும் ஆடவர் கலக்கங் கொள்வர்.
விலைமகள் போல வீட்டுப் பெண்கள்
அலைதல் தகுமோ ஆண்களை மயக்கி!

155 மலர்கள் வண்டினால் மகரந்தச் சேர்க்கையாம்
கலவி பெற்றுக் கருக்கொடு காய்க்கவவ்
வண்டினை மயக்க வண்ணமும் மணமும்
கொண்டிருப் பதுபோல் குடும்பப் பெண்களும்
தகட்டுச் சேலையும் தங்க நகைகளும்

160 பகட்டா யணிவது பண்பா காதே.
அங்ஙன மேயான் அணிந்து மயக்க
இங்ஙனம் நீவிர் ஏமாந்து போனீர்";
எனவே குற்றம் என்பால் உள்ளது;
நினைவில் இதனை நிறுத்துக உலகம்.

165 உம்மைப் பிரிந்திங் கொருபோ துமிரேன்
உம்மை யுலகையான் உறுவ துறுதி;
என்றெலாம் பிதற்றி ஏந்திழை நைந்தாள்.
வெளியி லிருந்தவள் அன்னை விளிக்க,
ஒளிவு மறைவின்றி உள்ளந் திறந்தே

170 இருவரும் பேசினர்; இறுதி முத்தம்
ஒருவருக் கொருவர் ஓயாது பொழிந்தனர்.
பாழ்ங்கிணற் றுள்ளே பாம்புகட் கிடையே
வீழ்ந்த முடவன் மேனின்று வீழ்ந்து
சொட்டுந் தேனைச் சுவைத்தல் போன்றது

175 கட்டி முத்தமிக் காதலர் கொடுப்பதே!


156. கருக் கொடு - கரு (கர்ப்பம்) கொண்டு. 159. தகட்டுச்சேலை- (பொன்னிழை நெய்த) தகடு போன்ற சேலை. 166. உம்மையுலகு - அந்த உலகம், மேலுலகம். 167. ஏந்திழை - அமராவதி. 168. வெளியிலிருந்தவள் - வெளியிலிருந்து அவளுடைய ; விளிக்க - அழைக்க. 173. மேனின்று - மேலே நீட்டிக்கொண்டிருக்கும் மரக் தொம்பில் உள்ள தேனடையிலிருந்து.