பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194

அம்பிகாபதி காதல் காப்பியம்

நீரா யெங்கும் நிறைந்தோய் போற்றி
மண்ணா யமைந்த மன்ன போற்றி

80 ஊனாய் உயிராய் உற்றோய் போற்றி
விரிமலர்க் காவாய் விளங்குவோய் போற்றி
பயன்மர மாகிப் பழுத்தோய் போற்றி
மருந்தாம் மரமாய் மன்னினோய் போற்றி
உதவிடும் ஊருணி போன்றோய் போற்றி

85 கோடையைத் தணிக்கும் குளிர்மரமே போற்றி
வெய்யிலில் நிழலாய் விளங்குவோய் போற்றி
உயிருக் குயிராய் உற்றுளோய் போற்றி
உள்ளத் துள்ளே ஒளித்துளோய் போற்றி
முத்தொழில் புரியும் முதல்வா போற்றி

90 குறிஞ்சி மலையாய்க் குலவுவோய் வணக்கம்
முல்லைக் காடாய் முகிழ்த்தோய் வணக்கம்
மருத நாடாய் மன்னியோய் வணக்கம்
நெய்தல் நிலமாய் நிலவுவோய் வணக்கம்
கருமுகில் மழையாங் கடவுளே வணக்கம்

95 பரவையாங் கடலாய்ப் பரந்தோய் வணக்கம்
உருவாய் அருவாய் உற்றோய் வணக்கம்
பெறலரும் பெரும்பெயர் பெற்றோய் வணக்கம்
மணந்தரு மலராய் மலர்ந்தோய் வணக்கம்
இனிக்குங் கனியாய் இலங்குவோய் வணக்கம்

100 பருகும் நீராய்ப் பயப்போய் வணக்கம்
உண்ணும் உணவாய் உற்றோய் வணக்கம்
வறுமை போக்கும் வளமே வணக்கம்
வினையினை விலக்கும் விறலோய் வணக்கம்
பகையினைத் தவிர்க்கும் பண்பினோய் வணக்கம்

105 அனைத்து நன்மையும் ஆனோய் வணக்கம்
ஒழுங்கிலா தோரை ஒறுப்போய் வணக்கம்


95. பரவை - பரந்த நீர், கடல். 96. அரு - உருவம் இல்லாதது. 99. இலங்குவோய் - விளங்குவோய். 100. பயப்போய் - பயன் அளிப்போய்,