பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198 அம்பிகாபதி காதல் காப்பியம்


நல்வகையாய்த் திறக்காமல் நாழிதாழ்த்திய
        தேனோநீ நவில்வாய் தோழீ!
நாழிதாழ்த்தக் காரணந்தான் நாவரசர்
        பாக்கள்தமை நயந்து சால
ஆழியினும் அளவற்ற ஆர்வங்கொண்
        டிருந்தமையே அன்றோ தோழீ?
நாவரசர் பாக்களிலே நயங்கண்ட
        சிவக்கடவுள் நந்தம் தமிழ்வல்
170 பாவரசன் அம்பிகாபதி பாச்சுவைக்கவும்
        திருவருட்கண் பார்த்துக் காக்கவே!

(6) "உலகிலுள உயிர்களெலாம் உய்யும்படி
        நம்பெருமான் உள்ளத் துள்ளே
அலகிலருள் கொண்டிட்டே ஆட்கொள்வ
        தறிவாயோ அரிவை நீயே?
அலகிலருள் செலுத்துபவர் அடியவரின்
        அருமகவை அரிந்தே உண்ணும்
கறியாக்கிப் படைக்கும்படி கடாவியதின்
        காரணத்தைக் கழறு வாயோ?
175 கறியாக்கிப் படைத்தபின்னர்க் கனிவுடனே
        அம் மகவைக் காக்கும் நோக்கால்
மறியுயிர்தந் தெழச்செய்த மாண்பினை நீ
        அறியாயோ மகளே யின்னும்!
அம்மகவைக் காத்திட்ட அருட் சிவன்றான்
        அம்புலவர் கம்பர் பெருமான்
தம்மகவாம் அம்பிகாபதி தன்னுடை நல்
        லுயிர்மீட்டுத் தருக நமக்கே!"


168. ஆழியினும் - கடலினும். திருமறைக் காட்டிலே குறிப்பிட்ட ஓர் அறையின் கதவைத் திறக்கும்படி நாவுக்கரசர் பாடியதாகவும், மூடும்படி ஞானசம்பந்தர் பாடியதாகவும் புராண வரலாறு கூறும், 173. அடியவர் - சிறுத் தொண்டர். அரு மகவு - அரிய பிள்ளை; சிறுத் தொண்டரின் மகன். 174. படைக்கும்படி - பரிமாறும்படி. 176.மகளே - பெண்ணே. 177-178. கம்பர் பெருமான் தம் - கம்பர் பெருமானுடைய