பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடவுள் வழிபாட்டுக் காதை 199


(திருமால்மீது)

(7) "காத்தற் கடவுளாம் மாலின் கழல்கள் தம்மைப் புகழ்ந்தே
180 ஏத்தி வணங்கிக் குரவை இனிதா டிடுவோம் பாடி!
காத்தற் கடவு ளென்னின் கருதரு இராம னாகிப்
பிறந்த பிறவியில் தன்னையே பேண வருந்திய தேனோ?
பிறந்த பிறவிக் கேற்பப் பெருமான் கோலம் பூண்டு
சிறந்த நடிப்பை யுலகில் செய்திட் டாரென் றறிவாய்!
185 காக்குங் கடவு ளாய கரிய செம்மல் கனிவொடு
காக்குமா றம்பிகா பதியைக் கழலிணை போற்று வோமே!"

(8) "கண்ணனாய்ப் பிறப்பெடுத்துக் காசினி புரந்த கரிய
வண்ணன் திருவடி மலரை வழுத்துதல் நங்கட னாமே!
காக்கும் மாலாங் கடவுள் கண்ணனாம் பிறவி தண்ணில்
190 போர்க்குத் துணையாய் நின்ற பொல்லாங் கேனோ புகல்வாய்!
போரில் அர்ச்சுனன் றனக்குப் பொருவில் துணையாய் நின்றது
பாரில் அனைவரும் ஒன்றெனும் பான்மையைப் பரப்பு தற்கே.
கண்ணனாய்ப் பிறந்திட் டிந்தக் காசினி காத்த செம்மல்
திண்ணன் அம்பிகா பதியைத் தீமை யின்றிக் காக்கவே!"

195(9)"கச்சியில் கோயில் கொண்டு காசினி புரக்கு மாலை
நச்சி யிணையடி பரவி நாந்தொழு திடுவம் நாளும்.
கச்சியில் கணிகண் ணன்றனைக் காவலன் பல்லவன் கடிந்தே
அச்சுறுத் தியகற் றியதேன் அறைக அதுமுறை யாமோ?


179. மால் - திருமல். 182. பேண - காத்துக் கொள்ள. 187.காசினி - உலகம். 190. போர்க்குத் துணையாய் நிற்றல் - பாரதப் போரில் பாண்டவர்க்குத் துணையாயிருந்தது; போரில் அர்ச்சுனனுக்குத் துணையாய் நின்று தேரோட்டியது. 191-192. எல்லா உயிர்களும் ஒத்தவையே ; இன்னார் இனியார் என்று பாராமல் போர் புரி என்று கண்ணன் அர்ச்சுனனுக்கு அறிவுறுத்தினார். 196. நச்சி - விரும்பி. 197. கணி கண்ணன் - திருமழிசையாழ்வாரின் அடியவன் ; காவலன் பல்லவன் - பல்லவ மன்னன்.