பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29. அனைவரும் ஆற்றாது அரற்றிய காதை

குறித்தநேரத்தில் கொலைபுரி மாக்கள்
வருத்தி யம்பியை வலிந்து கொடுபோய்
தூக்கி லிட்டே உயிரது தொலைந்த
யாக்கையைக் கொணர்ந்தே யாருங் காணும்

5 மேடை யொன்றில் மெல்ல வைத்தனர்.
ஓடை நீர்போல் உகுத்துக் கண்ணீர்
மக்கள் பல்லோர் மாய்ந்த புலவனை
ஒக்க விளித்த ஓதை பரந்த
ஓத ஒலியை ஒடுங்கச் செய்தது.

10 வீத லுற்ற புலவனின் வியன்புகழ்
வாழ்க வாழ்கென வாழ்த்திய வாயால்
வீழ்க வேந்தனின் விழுப்புகழ் என்றனர்.

(அன்னையின் அரற்றல்)



அங்கே அம்பியின் அன்னை வந்தே
எங்கே எங்கே என்மகன் எங்கே?

15 இங்கே உளானோ இங்கே உளனோ?
இங்கே உளானெனின் இனிய பார்வை
எங்கே எங்கே? என்றன் கண்மணி
இங்கே உளானெனின் இனிய சொற்கள்
எங்கே எங்கே? என்மகன் அம்பி
20 இங்கே உளானெனின் இன்புன் முறுவல்
எங்கே எங்கே? என்மகன் ஒருகால்
இறந்துவிட் டனனோ? எம்மை விட்டுத்


2. கொடுபோய் - கொண்டுபோய். 4. யாக்கை - உடம்பு 8. ஓக்க விளித்த ஓதை - ஒரு சேர அழைத்துக் கூவிய ஒலி. 9. ஓதம் - கடல். 10. வீதல் - இறத்தல். 12. விழுப்புகழ் - சிறந்த புகழ்.